செய்திகள்

ஒவ்வொரு நாளும் நம் வீரர்களை கொல்லும் பாக். ராணுவ தளபதியை சித்து கட்டி தழுவியதை எதிர்க்கிறேன் - அமரீந்தர் சிங்

Published On 2018-08-20 02:23 GMT   |   Update On 2018-08-20 02:46 GMT
பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியை கட்டி தழுவிய சித்துவின் செயலை தாம் எதிர்ப்பதாக பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். #NavjotSinghSidhu #AmarinderSingh
அமிர்தசரஸ் :

பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25ந்தேதி நடந்த தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்தது. அந்த கட்சி சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்கும் என தகவல்கள் வெளியாகின.

இதனை தொடர்ந்து  பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த பிரதமர் தேர்தலில் இம்ரான்கான் 176 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார்.  நாட்டின் 22வது பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார்.

இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து நேரில் கலந்து கொண்டு, இம்ரான்கானை வாழ்த்தினார்.



விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்த சித்துவை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா வரவேற்று கட்டித்தழுவியதுடன் அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

இந்த சம்பவத்திற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.  பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி தழுவும்பொழுது, இந்தியாவில் உள்ள பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை அந்நாட்டு ராணுவம் சுட்டு கொன்றது சித்துவின் நினைவுக்கு வரவில்லையா? என அக்கட்சியை சேர்ந்த சம்பீத் பத்ரா கேட்டுள்ளார்.

தொடர்ந்து அவர், பாகிஸ்தானின் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என சித்துஜி கூறியுள்ளார்.  எதற்காக அவர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்?  தீவிரவாதிகளை அனுப்பியதற்காகவா?, ஒன்றுமறியாத மக்களை கொன்றதற்காகவா?, நமது ராணுவ வீரர்களை கொன்றதற்காகவா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், சித்துவுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி மற்றும் பஞ்சாப் முதல் மந்திரியான அமரீந்தர் சிங் இதுபற்றி கூறும்பொழுது, ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்.  அவர்களது ராணுவ தளபதியை தழுவுவது என்பது ஏற்று கொள்ள முடியாதது. இதனை நான் எதிர்க்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். #NavjotSinghSidhu #AmarinderSingh
Tags:    

Similar News