செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கர்ப்பிணி மனைவியை பார்க்க டாக்டர் வேடமிட்டு சென்ற நபர் கைது

Published On 2018-08-18 22:33 GMT   |   Update On 2018-08-19 00:38 GMT
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த கர்ப்பிணி மனைவியை பார்க்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் டாக்டர் வேடமிட்டு சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். #AIIMS
புதுடெல்லி :

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வார்டுகளில் டாக்டர்கள் அணியும் வெள்ளை கோட் அணிந்தவாறு 25 வயது மதிக்கத்தக்க நபர் சுற்றித்திரிந்துள்ளார்.

அவரது நடவடிக்கைகள் சந்தேகப்படும்படி இருந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரிடம் விசாரித்ததில் தாம் ஒரு மூத்த டாக்டர் என அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் காவலர்களுக்கு சந்தேகம் தீராததால் அவரிடம் டாக்டர்கள் வைத்திருக்கும் அடையாள அட்டையை கேட்டபோது, பதற்றமைடைந்த அந்த நபர் தாம் டாக்டர் வேடமிட்டு வந்த உண்மையை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து தெற்கு டெல்லி காவல் துணை ஆணையர் ரோமிலா பணியா கூறுகையில், ‘ அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் காசியாபாத்தை சேர்ந்த அஷிஷ் திருப்பதி என்பது தெரியவந்தது.

பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கர்ப்பிணி மனைவியை பார்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மனைவியை எளிதில் பார்க்க முடியாத அவர், டாக்டர் வேடமிட்டு சென்றால் எளிதில் மனைவியை பார்க்க முடியும் என்பதால் வெள்ளை கோட் அணிந்து மருத்துவமனை வார்டுகளில் சுற்றித்திரிந்துள்ளார்’ என தெரிவித்தார்.

எனினும், அவர் மீது வழக்கு பதியப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News