செய்திகள்

திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி வேன், கார், ஜீப் கட்டணம் நிர்ணயம்

Published On 2018-08-10 06:19 GMT   |   Update On 2018-08-10 06:19 GMT
திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி வேன், கார், ஜீப் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணம் கூடுதலாக வசூலித்தால் டிரைவர்கள், வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளது. அதையொட்டி தனியார் வாகனங்களான வேன், கார், ஜீப் ஆகியவற்றின் உரிமையாளர்கள், டிரைவர்களை வரவழைத்து, திருப்பதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விவேகானந்த ரெட்டி ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதேபோல் அக்டோபர் மாதம் 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தனியார் வாகனங்களில் திருப்பதியில் இருந்து திருமலைக்கும், திருமலையில் இருந்து திருப்பதிக்கும் வந்து செல்வார்கள்.

எனவே பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது. கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் டிரைவர்கள் மீதும், அதன் வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். திருப்பதியில் இருந்து திருமலை, திருமலையில் இருந்து திருப்பதிக்கு பெரியவர்களுக்கு ரூ.65, சிறியவர்களுக்கு ரூ.40 நிர்ணயித்துள்ளோம். கட்டண விவரம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் தனியார் வாகனங்களில் ஒட்டப்படும். அதில் கூறப்பட்டுள்ள படியே பக்தர்களிடம் கட்டணமாக வசூல் செய்ய வேண்டும்.

மேலும் திருப்பதியில் இருந்து திருச்சானூர், ஸ்ரீகாளஹஸ்தி, காணிப்பாக்கம், சீனிவாசமங்காபுரம் ஆகிய கோவில்களுக்குத் தனியார் வாகனங்களில் பக்தர்கள் பலர் சென்று வருவார்கள். மேற்கண்ட கோவில்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு திருப்பதி, திருமலையில் இருந்தும் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #TirupatiTemple

Tags:    

Similar News