செய்திகள்

ரியாத் விமான நிலைய விபத்து - ஜெட் ஏர்வேஸ் விமானிகள் சஸ்பெண்ட்

Published On 2018-08-07 05:13 GMT   |   Update On 2018-08-07 05:13 GMT
ரியாத் விமான நிலையத்தின் டாக்சிவேயில் இருந்து விமானத்தை டேக் ஆப் செய்ய முயன்றதாக ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் இரண்டு பைலட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். #JetAirways #RiyadhAirport
மும்பை:

சவுதியின் ரியாத் நகர விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு கடந்த 3-ம் தேதி அதிகாலை ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அதில் 142 பயணிகள் 7 ஊழியர்கள் இருந்தனர். விமானம் உயரே எழும்பும் சமயத்தில், திடீரென டேக் ஆப் கைவிடப்பட்டது. இதனால் விமானம் ஓடுபாதையை தாண்டி அதிவேகமாக சென்றது. பைலட் பிரேக்கை கடுமையாக அழுத்தியதால் சறுக்கிச் சென்ற விமானம் பயங்கர சத்தத்துடன் நின்றது. உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர்.



விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் கடைசி நேரத்தில் டேக் ஆப் கைவிடப்பட்டிருக்கலாம் எனவும், ஓடுபாதையின் எல்லைக்குள் விமானத்தை நிறுத்துவதற்காக பிரேக்கை கடுமையாக அழுத்தியதால் விமானம் சறுக்கிச் சென்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக சவுதியின் விமான போக்குவரத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி இந்திய விமான போக்குவரத்து பொது இயக்குனரகத்திற்கு (டிஜிசிஏ) அறிக்கை அளித்தது. அதில், நிர்ணயிக்கப்பட்ட ஓடுபாதையில் இருந்து விமானத்தை ஓட்டாமல், டாக்சிவே எனப்படும் இணைப்பு பாதையில் இருந்து விமானத்தை டேக் ஆப் செய்ய முயன்றதாக பைலட்டுகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையை ஆய்வு செய்த டிஜிசிஏ, சம்பந்தப்பட்ட இரண்டு பைலட்டுகளின் லைசென்ஸ்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #JetAirways #MumbaiFlight #RiyadhAirport #RunwayMishap
Tags:    

Similar News