செய்திகள்

இம்ரான் கானுடன் பிரதமர் மோடி நட்பு பாராட்ட வேண்டும் - மெகபூபா முப்தி வலியுறுத்தல்

Published On 2018-07-28 12:13 GMT   |   Update On 2018-07-28 12:13 GMT
இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ள பாகிஸ்தான் எதிர்கால பிரதமர் இம்ரான் கானுடன் பிரதமர் மோடி நட்பு பாராட்ட வேண்டும் என காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார். #MehboobaMufti #ImranKhanModifriendship
ஸ்ரீநகர்:

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அங்கு கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் விரைவில் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்தியாவுடனான பிணக்குகளையும், காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண விரும்புவதாக இம்ரான் கான் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ள பாகிஸ்தான் எதிர்கால பிரதமர் இம்ரான் கானுடன் பிரதமர் நரேந்திர மோடி நட்பு பாராட்ட வேண்டும் என காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற மக்கள் ஜனநாயக கட்சியின் 19-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற மெகபூபா முப்தி கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் எப்போதுமே நமது நாட்டின் பிரதமர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுடன் நட்புக்கரம் நீட்டியதுடன், எல்லைப்பகுதியில் போர்நிறுத்தத்தையும் ஏற்படுத்தினார். 

அதுதான் சிறந்த தலைமைப்பண்பு. தேர்தல்கள் வரலாம், போகலாம். ஆனால், இதைப்போன்ற தலைவர்கள் தேர்தல்களைப் பற்றி கவலைப்பட்டதில்லை.

பாகிஸ்தானில் புதிய அரசு அமையவுள்ளது. புதிய பிரதமர் பொறுப்பேற்கவுள்ளார். அவர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்தியாவுடன் அவர் விரும்பும் நட்பை ஏற்று சாதகமான முறையில் பிரதமர் மோடி நடந்துகொள்ள வேண்டும் என நான் கேட்டுகொள்கிறேன்.

மனிதநேயத்துக்கு உட்பட்டு, காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுகண்டு, இந்த மண்ணில் ரத்தம் சிந்தப்படுவதற்கு முடிவுகட்டும் பிரதமரின் பெயர் இந்த நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். #MehboobaMufti #ImranKhanModifriendship
Tags:    

Similar News