செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு

Published On 2018-07-07 08:09 GMT   |   Update On 2018-07-07 08:09 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளம்பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். #ThreekilledinKashmir
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்திற்குட்பட்ட ஹவூரா ரேட்வானி கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த கிராமத்தை முற்றுகையிட்ட பாதுகாப்பு படையினர் அங்குள்ள வீடுகளில் இன்று சோதனை நடத்த தொடங்கினர். அவர்களை அனுமதிக்க மறுத்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தி, தேடுதல் வேட்டையை சீர்குலைத்து தடுத்தனர்.

இதைதொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அன்ட்லீப் என்ற இளம்பெண், இர்ஷாத் மற்றும் ஷாகிர் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். சிலர் காயம் அடைந்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் நடைபெற்று வருவதாகவும், குல்காம் மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவுவதாகவும், சம்பவ இடத்துக்கு கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீநகரில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதர பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் பரவுவதை தடுக்கும் வகையில் குல்காம் மாவட்டத்தில் கைபேசி இண்டர்நெட் சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. #ThreekilledinKashmir
Tags:    

Similar News