செய்திகள்

டெல்லியில் இடி, மின்னலுடன் கனமழை - விமான சேவைகள் பாதிப்பு

Published On 2018-06-09 13:38 GMT   |   Update On 2018-06-09 13:38 GMT
தலைநகர் டெல்லியில் இடி, மின்னலுடன் இன்று மாலை பெய்துவரும் கனமழை காரணமாக தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. #raininDelhi #flightsdiverted
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் கடந்த 15 நாட்களாக வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது.

மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர பல வாகனங்கள் சென்றதை காண முடிந்தது.

சூறைக்காற்றை தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்து வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதும், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் டெல்லியில் இருந்து பிறபகுதிகளுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், இங்கு தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் பிறபகுதிகளில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. #raininDelhi #flightsdiverted 
Tags:    

Similar News