செய்திகள்

கர்நாடகா தேர்தலில் பெற்றோர் வாக்களித்தால் குழந்தைகளுக்கு 4 கூடுதல் மதிப்பெண்கள்

Published On 2018-05-04 21:46 GMT   |   Update On 2018-05-04 21:46 GMT
கர்நாடகா சட்டசபை தேர்தலில் வாக்களிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு 4 மதிப்பெண்கள் வழங்க அம்மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மைக் கழகம் முடிவு செய்துள்ளது. #KarnatakaElections #Extramarksforstudents

பெங்களூரு:

கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் வருகிற மே 12-ம் தேதி நடக்கிறது. தேர்தல் முடிவுகள் 15-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வாக்களிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு 4 மதிப்பெண்கள் வழங்க அம்மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மைக் கழகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, சட்டசபை தேர்தலில் பெற்றோர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களித்த பெற்றோர்கள் விரலில் வைக்கப்பட்ட மையை பள்ளியில் காண்பிக்க வேண்டும். அப்படி தந்தை காட்டினால் இரண்டு மதிப்பெண்களும், தாய் காட்டினால் இரண்டு மதிப்பெண்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக ஒரு குழந்தைக்கு நான்கு மதிப்பெண்கள் கிடைக்கும். மதிப்பெண்களுக்காக பெற்றோரை வாக்களிக்க குழந்தைகள் வலியுறுத்துவார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து கர்நாடகா மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மை கழக பொதுச்செயலாளர் ஷஷி குமார் கூறுகையில், பள்ளியில் இதற்காக தனியாக பூத் அமைக்கப்படும். பெற்றோர் தங்களது மையிட்ட விரலை காண்பித்து, பிள்ளைகளின் விவரங்களை தெரிவிக்கலாம். விவரங்களை குறித்த பின்னர், இன்டர்னல் அசஸ்மென்ட் மதிப்பெண் வழங்கும்போது இந்த 4 மதிப்பெண்ணை வழங்குவோம். நாங்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு கிடையாது. வாக்களிக்க வேண்டும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். வாக்களித்த பின்னர் பெற்றோரை மாணவர்கள் பள்ளிக்கும் அழைத்து வரலாம். குலுக்கல் முறையில் பரிசும் வழங்கப்படும், என்றார்.

கடந்த ஆண்டு சோதனை அடிப்படையில் இந்த முயற்சியை ஒரு தனியார் பள்ளி செய்திருந்தது. அப்போது, 2,000 மாணவர்களில் 1,700 

மாணவர்களின் பெற்றோர் வாக்களித்து இருந்தனர். தற்போது இந்தக் கழகத்தில் 3,000 பள்ளிகள் உள்ளன. இந்த அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் பின்பற்றப்பட உள்ளது. #KarnatakaElections #Extramarksforstudents
Tags:    

Similar News