செய்திகள்

இறப்பதற்கு அனுமதி கேட்கும் 5000 குஜராத் விவசாயிகள்

Published On 2018-04-25 06:37 GMT   |   Update On 2018-04-25 06:37 GMT
குஜராத்தில் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்திவிட்டதால் பாதிக்கப்பட்ட 5000 விவசாயிகள் பிழைக்க வழியில்லாமல் இறப்பதற்கு அனுமதி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GujaratFarmers
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தனர். அதில், குஜராத் மாநில அரசும், குஜராத் பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனமும் தங்கள் நிலங்களை பறித்துவிட்டதாகவும், பிழைக்க வழியில்லை என்பதால் இறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இதுபற்றி விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடி வரும் குஜராத் கேதுத் சமாஜ் அமைப்பைச் சேர்ந்த நரேந்திரசின் கோகில் கூறுகையில், ‘நிலங்களை அரசு கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 5259 பேர் பிழைப்புக்கு வழியில்லாமல் இறப்பதற்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் குஜராத் முதல்வருக்கும் கடிதங்கள் அனுப்பி உள்ளோம்

கையகப்படுத்திய 5 ஆண்டுகளுக்குள் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் அந்த நிலங்களை நிறுவனத்தால் கைப்பற்ற முடியாது. ஆனால் சட்டத்திற்கு புறம்பாக 20 ஆண்டுகளாக அந்த நிலங்களில் இருந்து விவசாயிகளை வெளியேற்றும் முயற்சி நடக்கிறது. இதற்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துகிறார்கள். அமைதியாக போராடி வரும் விவசாயிகள் மீது இரண்டு முறை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அரசாங்கத்தால் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறோம்’ என்றார். #GujaratFarmers #RightToDie
Tags:    

Similar News