செய்திகள்

அமலுக்கு வந்தது அவசர சட்டம் - தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம்

Published On 2018-04-23 03:39 GMT   |   Update On 2018-04-23 03:39 GMT
வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வகை செய்யும் அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது. #FugitiveEconomicOffendersOrdinance
புதுடெல்லி:

வங்கிக் கடன் மோசடி, நிதி மோசடி மற்றும் ஊழல் என பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த மாதம் 12-ம் தேதி பாராளுமன்ற மக்களவையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முழுமையாக முடக்கிப் போட்டதால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது.

இந்நிலையில், பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கி தப்பியோடி தலைமறைவானவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. பின்னர், இந்த அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.



இந்த அவசர சட்டம் 6 மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும். அதற்குள் பாராளுமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, வரும் குளிர்கால கூட்டத் தொடரில் பொருளாதார குற்றவாளிகள் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டும். #FugitiveEconomicOffendersOrdinance

Tags:    

Similar News