செய்திகள்

கர்நாடக தேர்தல் - வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ.413 கோடி பறிமுதல்

Published On 2018-04-21 10:39 GMT   |   Update On 2018-04-21 10:39 GMT
கர்நாடக சட்டசபை தேர்தலில் ‘ஓட்டுக்கு நோட்டு’ நோக்கத்தில் பிரபலங்கள் வைத்திருந்த 413 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறையினர் இதுவரை பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பா.ஜ.க. மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கவும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

கொள்கைகளுக்காக மக்கள் வாக்களிக்காமல் போனாலும் பணத்தை வைத்து வாக்குகளை விலைக்கு வாங்கிவிட அனைத்து கட்சிகளுமே போட்டிப்போட்டுக் கொண்டு மும்முரம் காட்டி வருகின்றன.

‘ஓட்டுக்கு நோட்டு’ என்னும் பார்முலாவுக்கு முடிவுகட்டும் வகையில் தேர்தல் கமிஷன் அதிகாரிகளும், வருமான வரித்துறையினரும் பறக்கும் படைகளை அமைத்து பணப்பட்டுவாடாவை தடுக்க வேட்டையாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வாக்காளர்களுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரபலங்கள் லஞ்சமாக தருவதற்காக வைத்திருந்த - கணக்கில் வராத சுமார் 413 கோடி ரூபாய் மற்றும் 1.32 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை வருமான வரித்துறையினர் இதுவரை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் பெரும்பகுதி 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் என தெரியவந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக பெங்களூருவில் மட்டும் ரொக்கமாக 2.47 கோடி ரூபாய் பிடிபட்டுள்ளது. மைசூருவில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க வைத்திருந்த சுமார் 9.51 கோடி மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வருமான வரித்துறையினர் கையில் சிக்கியது தவிர, தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் நடத்திய சோதனைகளில் 32.54 கோடி ரூபாய் பிடிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElection
Tags:    

Similar News