செய்திகள்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி 20 ஆம் தேதி உண்ணாவிரதம் - சந்திரபாபு நாயுடு

Published On 2018-04-14 11:44 GMT   |   Update On 2018-04-14 11:44 GMT
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி வருகிற 20 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். #ChandrababuNaidu #SpecialStatus
அமராவதி:

ஒருங்கிணைந்த ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு 6 அம்ச திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 20.6.2014-ல் மாநிலங்களவையில் அறிவித்தார்.   நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் சிறப்பு அந்தஸ்து வழக்கப்படவில்லை.

இந்த நிலையில் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மத்தியில் பா.ஜ.க.வும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன. பா.ஜ.க.வும், தெலுங்கு தேசமும் கூட்டணி கட்சிகள் என்பதால், ஆந்திரா மாநிலத்துக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இதனைக்கண்டித்து, சந்திரபாபுநாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதேபோல், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் ஆந்திர மாநில எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு பாராளுமன்றத்தை முடக்கினர். மத்திய அரசைக் கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் 5 பேர்  தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோல், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு மந்திரிகளும் ராஜினாமா செய்தனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க கோரி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அளித்து வருகிறார்.

அந்த வகையில், வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நாள் முழுவதும் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு முடிவு செய்துள்ளார்.  #ChandrababuNaidu #SpecialStatus
Tags:    

Similar News