செய்திகள்

மும்பையில் மாணவர்கள் திடீர் போராட்டம்- ரெயில் சேவை கடும் பாதிப்பு

Published On 2018-03-20 05:52 GMT   |   Update On 2018-03-20 05:52 GMT
மும்பை ரெயில் தண்டவாளங்களில் அமர்ந்து ஏராளமான மாணவர்கள் போரட்டம் நடத்தி வருவதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. #Mumbai #Railroko
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மட்டுங்கா மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரெயில் நிலையத்திற்கு இடையே ஏராளமான மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ரெயில்வே தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், உடனடியாக பணிநியமனம் கேட்டு இன்று காலை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மிகவும் முக்கியமான மற்றும் பிசியான ரெயில் நிலையம் ஆகும். 60 க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் வேறு மார்க்கமாக செல்லுமாறு ரெயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

போலீஸ் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் இல்லை. போலீசார் அவர்களை விரட்டியடிக்க முயற்சி செய்தனர். ஆனால் மாணவர்கள் ரெயில்கள் மீது கற்களை வீசி தாக்கி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ரெயில்வே தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பயிற்சி பெற்றிருந்தாலும் அவர்கள் அனைவருக்கு பணிநியமனம் வழங்க விதிமுறைகள் அனுமதிக்காது. அவர்களில் சிலருக்கு மட்டுமே பணி கிடைக்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தண்டவாளத்தில் அமர்ந்த மாணவர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வெளியேற்றியதையடுத்து போக்குவரத்து தொடங்கியது. இருப்பினும் மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். #Railroko #Mumbai #tamilnews
Tags:    

Similar News