செய்திகள்

சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு ஏவப்படுகிறது

Published On 2018-03-03 08:32 GMT   |   Update On 2018-03-03 08:32 GMT
சந்திரயான்-2 விண்கலம் அக்டோபர் மாதம் நிலவிற்கு ஏவப்படும் என்று இஸ்ரோ அமைப்பு தெரிவித்துள்ளது.

மும்பை:

இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதி ‘சந்திரயான்-1’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.

நிலவில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான் விண்கலம் தனது ஆய்வுப் பணியை தொடங்கி தகவல்களை அனுப்பியது. இது இஸ்ரோவின் பெரும் சாதனையாகும்.

இதன் மூலம் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்து அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

‘சந்திராயன்-2’ விண்கலம் வடிவமைக்கப்பட்டு வருகிற ஏப்ரல் மாதம் நிலவுக்கு ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல் மாதம் ஏவப்படும் என்று மூத்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர்.

ஆனால் தற்போது விண்கலம் ஏவப்படுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஏப்ரலில் ஏவப்படுவதற்கான தயார் நிலையில் விண்கலம் இல்லை. இன்னும் அதில் ஏற்பாடுகள் செய்ய வேண்டியது உள்ளது.

இதனால் ‘சந்திரயான்-2’ அக்டோபர் மாதம் நிலவுக்கு ஏவப்படுகிறது. ‘சந்திரயான்-2’ நிலவில் நிலை நிறுத்தப்பட்டதும் நிலவின் தென் பகுதியில் தரை இறக்கப்பட்ட முதல் விண்கலம் என்ற சிறப்பை பெறும்.

இதுகுறித்து இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், சந்திரயான்-2 விண்கலத்தில் பல கட்ட சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் நாங்கள் அவசரப்பட விரும்பவில்லை என்றார்.

Tags:    

Similar News