செய்திகள்
ஏரிக்கரையில் பேக்கில் இருந்து கைப்பற்றப்பட்ட வாலிபர் புகைப்படம்.

கடப்பா ஏரியில் பிணமாக கிடந்தவர்கள் சேலத்தை சேர்ந்தவர்கள்: அடித்து கொலையா?

Published On 2018-02-19 10:57 GMT   |   Update On 2018-02-19 10:57 GMT
கடப்பாவில் உள்ள ஏரியில் பிணமாக கிடந்தவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தமிழக போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
திருமலை:

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா வனப்பகுதியில் பழமையான ராமர் கோவில் உள்ளது.

இந்தகோவிலுக்கு எதிரில் வனப்பகுதியை ஒட்டி பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று மர்மமான முறையில் 5 பேர் இறந்து கிடந்தனர். 5 பேரின் உடல்களிலும் ரத்தக் காயங்கள் இருந்தன.

ஏரிக்கு அருகே கிடந்த பைகளில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை பகுதி முகவரி இருந்ததால் அவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அந்த பைகளில் இருந்த 2 செல்போன் எண்களையும் போலீசார் கைப்பற்றினர்.

பைகளில் இருந்த முகவரி விவரம் மற்றும் அந்த செல்போன் எண்களும் சேலம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்றிரவு தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் சேலம் மாவட்ட உளவுத்துறை போலீசார் ஏத்தாப்பூர், கரியகோவில், வீரகனூர், கருமந்துறை ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் விசாரணை நடத்தினர். இறந்தவர்கள் 5 பேரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த அடியலூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் கீழ் ஆவரை கிராமத்தை சேர்ந்த கருப்பண்ணன், கருமந்துறையை சேர்ந்த ஜெயராஜ், முருகேசன், சின்னபையன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிணமாக கிடந்த 5 பேரும் செம்மரம் வெட்ட வந்த கூலி தொழிலாளர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல்கள் மிதந்த ஏரியின் பின்புறம் செர்லோபல்லி மலை வனப்பகுதி உள்ளது. இங்கு முதல் ரக செம்மரங்கள் அதிகளவில் உள்ளன.

இதனை வெட்டி கடத்த, 3 நாட்களுக்கு முன்பு 30-க்கும் மேற்பட்டோர் 3 குழுக்களாக பிரிந்து வந்தனர். அவர்களை வனத்துறையினர் மற்றும் போலீசார் விரட்டிச் சென்றுள்ளனர்.

போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஏரியில் குதித்திருக்கலாம் என்றும் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இறந்த 5 பேரையும் போலீசார் பிடித்து சென்று அடித்து, துன்புறுத்தியபோது இறந்திருக்கலாம்.

கொலையை மறைக்க 5 உடல்களையும் ஆந்திர போலீசார், ஏரியில் வீசி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. கடப்பாவில் பிரேத பரிசோதனை நடப்பதால், உண்மை வெளிவர வாய்ப்பில்லை.

எனவே தமிழகம், கர்நாடகம் போன்ற அண்டை மாநில அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் அல்லது மத்திய குழுவினரின் மேற்பார்வையில் பிரேத பரிசோதனை நடக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பலியான 5 பேரின் உறவினர்கள் மற்றும் கருமந்துறை அடியலூர் கிராம மக்கள் இறந்தவர்களின் உடல்களை கொண்டுவர தமிழக அரசு உதவ வேண்டும்.

ஆந்திர போலீசார் முறையாக விசாரிக்க மாட்டார்கள். 5 பேரும் எப்படி இறந்தார்கள்? என்பது குறித்து தமிழக போலீசார் ஆந்திராவுக்கு சென்று விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து 5 தமிழக தொழிலாளர்களின் சாவு குறித்து விசாரிக்க சேலம் தனிப்படை போலீசார் ஆந்திரா செல்கின்றனர்.

5 பேரின் உடல்கள், கடப்பா அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. 5 பேர் சாவில் மர்மம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தக் கோரியும் மனித உரிமை அமைப்புகள் கடப்பா அரசு ஆஸ்பத்திரி முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். #Tamilnews
Tags:    

Similar News