செய்திகள்

ரோட்டோமேக் நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை

Published On 2018-02-19 06:26 GMT   |   Update On 2018-02-19 06:26 GMT
வங்கிக் கடன் மோசடி தொடர்பாக ரோட்டோமேக் நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரியின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கான்பூர்:

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றும் சில அதிகாரிகள் துணையுடன் வங்கி உத்தரவாத கடிதத்தை போலியாக பெற்று சர்வதேச வங்கி கிளைகளில் ரூ.11,700 கோடி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தெரியவந்ததும் நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். போலீசார் வங்கி அதிகாரிகள் சிலரை கைது செய்துள்ளனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ரோட்டாமேக் பேனா தொழிற்சாலையின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரியின் மோசடி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் மும்பையில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கொல்கத்தாவில் உள்ள அலகாபாத் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் உள்பட 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் ரூ.800 கோடிக்கும் மேல் கடன் வாங்கி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக பேங்க் ஆப் பரோடா அளித்த புகாரின் அடிப்படையில் விக்ரம் கோத்தாரி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக கான்பூரில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். கோத்தாரி, அவரது மனைவி மற்றும் மகனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் கோத்தாரி கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பேங்க் ஆப் பரோடா, ரோட்டோமேக் நிறுவனத்தை கடனை வேண்டுமென்றே திரும்ப செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்த்தது. அந்த பட்டியலில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று ரோட்டாமேக் நிறுவனம்  அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், தீர்ப்பு ரோட்டோமேக் நிறுவனத்துக்கு எதிராக அமைந்தது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Tags:    

Similar News