செய்திகள்

நிரவ் மோடி நிறுவனத்தில் காங். தலைவர் அபிஷேக் சிங்வி மனைவி வாங்கிய ரூ.1½ கோடி நகை

Published On 2018-02-18 06:35 GMT   |   Update On 2018-02-18 06:35 GMT
காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி மனைவி நிரவ் மோடிக்கு சொந்தமான நகைக்கடை நிறுவனத்தில் இருந்து ரூ.1½ கோடி மதிப்புள்ள நகைகள் வாங்கி இருப்பது தற்போது வெளியாகி உள்ளது. #NiravModiScam #NiravModi
புதுடெல்லி:

பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மோசடி மன்னன் நிரவ் மோடிக்கு காங்கிரசுடன் தொடர்பு இருப்பதாக மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் குற்றம் சாட்டி இருந்தார்.

அதில், நிரவ் மோடியின் வைர நிறுவனம் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி மனைவியின் சொத்தை குத்தகைக்கு எடுத்ததாகவும், இதில் அவருக்கும், நிரவ் மோடிக்கும் இடையே வர்த்தக தொடர்பு இருப்பதாகவும் நிர்மலா சீத்தாராமன் கூறி இருந்தார்.

இதை அபிஷேக் சிங்வி மறுத்தார். எங்களுக்கும், நிரவ் மோடிக்கும் இடையே எந்தவிதமான வர்த்தக தொடர்பும் கிடையாது. எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான இடத்தை நிரவ் மோடி நிறுவனம் வாடகைக்கு எடுத்திருந்தது. அந்த ஒப்பந்தமும் 2017 டிசம்பர் மாதத்துடன் முடிந்து விட்டது. இதனால் அவர்கள் காலி செய்து விட்டனர் என்று கூறினார்.

இதற்கிடையே அபிஷேக் சிங்வியின் மனைவி அனிதா சிங்வி நிரவ் மோடி நிறுவனத்தில் ரூ. 1½ கோடி மதிப்புள்ள நகைகளை வாங்கி இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.

டெல்லியில் நிரவ் மோடி அலுவலகத்தில் சோதனையிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள். அதில், நிரவ் மோடி தன்னிடம் நகை வாங்கும் முக்கிய நபர்களின் பட்டியலை பதிவு செய்து வைத்திருந்தார்.

அதில், அபிஷேக் சிங்வி மனைவியின் பெயர் இடம் பெற்றிருந்தது. அபிஷேக் சிங்வி மனைவி 20.5.2014, 21.8.2014, 17.1.2015 ஆகிய தேதிகளில் நகை வாங்கியதாகவும், ரூ.1½ கோடி அளவுக்கு இந்த நகைகள் வாங்கப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரி கட்டுவதற்காக தயாரிக்கப்படும் ஆவணத்திலும் இது இடம்பெற்றுள்ளது. அனிதா சிங்வியின் பான்கார்டு எண்ணும் (வருமான வரி கணக்கு எண்) அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து அபிஷேக் சிங்வியிடம் கேட்ட போது, எனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. இது தேவையில்லாமல் புனையப்பட்ட புகாராக இருக்கிறது என்று கூறினார். #NiravModiScam #NiravModi
Tags:    

Similar News