செய்திகள்

இறுதிச்சடங்கிற்கு பணமில்லாததால் மகனின் உடலை மருத்துவமனைக்கு தானமாக கொடுத்த தாய்

Published On 2018-02-17 21:06 GMT   |   Update On 2018-02-17 21:06 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் இறுதிச்சடங்கிற்கு பணமில்லாததால் பெற்ற மகனின் உடலை தாய் ஒருவர் மருத்துவமனைக்கு தானமாக கொடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. #Chhattisgarh #womandonatessonsbody #Nomoneyforlastrites
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாமன் (21). இவர் கடந்த திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். இதையடுத்து ஜக்தல்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர்.

இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி கடந்த வியாழன் அன்று பாமன் உயிரிழந்தார். மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவரான பாமனின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்ல பணமில்லாததால் அவரது தாய் தடுமாறியுள்ளார். இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அந்த தாய் அழுது புலம்பினார். இதனை அறிந்து மருத்துவமனைக்கு வந்த பாமனின் உறவினர்கள் அவரது தாயாருக்கு ஆறுதல் கூறினர்.

அவர்களின் நிலையை கண்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் உடலை கொண்டு செல்ல வசதியில்லாவிட்டால், மருத்துவமனைக்கு தானமாக கொடுக்குமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த தாய் தனது மகனின் உடலை அந்த மருத்துவமனைக்கு தானமாக கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லவும் இறுதிச்சடங்கு செய்யவும் பணமில்லாமல் மருத்துவமனைக்கு தானாமாக வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்ல முடியாமால் இதுபோன்ற அவலங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarh #womandonatessonsbody #Nomoneyforlastrites #tamilnews
Tags:    

Similar News