செய்திகள்

11 முதல்-மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள்

Published On 2018-02-13 05:08 GMT   |   Update On 2018-02-13 05:08 GMT
மாநில முதல்-மந்திரிகள் விவரங்கள் குறித்து நடத்திய ஆய்வில் 11 முதல்-மந்திரிகள் மீது கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் மொத்தம் 31 மாநில முதல்-மந்திரிகள் உள்ளனர். இவர்கள் கல்வி தகுதி என்ன? இவர்கள் பெயரில் எவ்வளவு சொத்துகள் உள்ளது? இவர்கள் மீது போலீசில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன? என்பன போன்றவை குறித்து ஜனநாயக சீர்திருத்த கழகம் எனும் அமைப்பு ஆய்வு நடத்தியது.

அந்த ஆய்வில் சில முதல்-மந்திரிகள் பற்றிய ஆச்சரிய தகவல்களும், சில அதிர்ச்சித் தகவல்களும் தெரிய வந்துள்ளன. குறிப்பாக 31 முதல்-மந்திரிகளில் 11 முதல்-மந்திரிகள் மீது கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

கிரிமினல் பின்னணி உள்ள முதல்-மந்திரிகளில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னவிஸ் முதலிடத்தில் உள்ளார். அவர் மீது 22 குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 3 வழக்குகள் மிகக் கடுமையான கிரிமினல் வழக்குகளாகும்.

கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் கிரிமினல் குற்ற முதல்-மந்திரிகளில் 2-வது இடத்தில் இருக்கிறார். அவர் மீது 11 கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 10 குற்ற வழக்குகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.



ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ரகுபர்தாஸ் 8 குற்ற வழக்குகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறார். பஞ்சாப் முதல்-மந்திரி அமீர்ந்தர்சிங் 4 வழக்குகளுடன் 5-வது இடத்திலும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது 4 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீது மூன்று கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் 2 கிரிமினல் வழக்குகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறார்.

புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி 2 கிரிமினல் வழக்குகளுடன் 9-வது இடத்தில் உள்ளார். காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஆகியோர் தலா ஒரு கிரிமினல் வழக்குகளுடன் 10 மற்றும் 11-வது இடங்களில் உள்ளனர்.

முதல்-மந்திரிகளின் கல்வித் தகுதியும் திருப்தியாக இல்லை. 31 முதல்-மந்திரிகளில் 10 சதவீதம் பேர் 12-ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 39 சதவீத முதல்-மந்திரிகள் பட்டதாரிகள்.

32 சதவீதம் பேர் தொழில் சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்கள். 16 சதவீதம் முதல்-மந்திரிகள் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். 3 சதவீத முதல்-மந்திரிகள்தான் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News