செய்திகள்

24 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படுகிறது - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Published On 2018-02-07 23:55 GMT   |   Update On 2018-02-07 23:55 GMT
2021-2022-ம் நிதி ஆண்டுக்குள், 24 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி:

2021-2022-ம் நிதி ஆண்டுக்குள், 24 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் மாவட்ட மருத்துவமனைகள் அமைந்துள்ள இடங்களில் அவற்றுடன் இணைந்த 24 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள், 2021-2022-ம் நிதி ஆண்டுக்குள் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனால், கூடுதலாக எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். அத்துடன், 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு மருத்துவ கல்லூரி இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

அதுபோல், நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் 112 நர்சிங் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 136 பேறுகால மருத்துவ பயிற்சி நிறுவனங்களையும் 2019-2020-ம் நிதி ஆண்டுக் குள் முடிப்பதற்கும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

2020-2021-ம் நிதி ஆண்டுக்குள், 10 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்களையும், 8 ஆயிரத்து 58 முதுநிலை மருத்துவ இடங்களையும் அதிகரிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

மேற்கண்ட பணிகளுக்கு ரூ.14,930 கோடி செலவாகும்.

கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.1,000 வீதம் உயர்த்தி வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்தது. இதனால், குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 500 ஆக இருக்கும்.

பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் ‘உஜ்வாலா யோஜனா’ திட்டத்தில், 5 கோடி பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதை 8 கோடி பெண்களுக்கு வழங்குவது என்று மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக கூடுதலாக ரூ.4 ஆயிரத்து 800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சேது சமுத்திர திட்டம் பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. 
Tags:    

Similar News