செய்திகள்

இந்திராணி முகர்ஜியை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி

Published On 2018-02-05 09:55 GMT   |   Update On 2018-02-05 09:55 GMT
ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜியை அமலாக்கத்துறை வழக்கில் 2 நாள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு, அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியது. இந்த நிறுவனம் மொரீஷியஸ் நாட்டில் இருந்து முதலீடுகளை திரட்டிய வகையில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் பீட்டர் முகர்ஜி, ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியும், பீட்டர் முகர்ஜியின் மனைவியுமான இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது பொருளாதாரத்துறை அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு, விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சில முரண்பாடுகள் உள்ளதால் அவர்களின் வாக்குமூலங்களை இந்திராணி முகர்ஜியை அருகில் வைத்துகொண்டு உறுதிப்படுத்திகொள்ள தீர்மானித்தனர்.

இதையடுத்து, ஷீனா போரா கொலை வழக்கில் மும்பை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக அமலாக்கத்துறை சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மும்பை ஐகோர்ட் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், மும்பையில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திராணி முகர்ஜி இன்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை இரண்டு நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்த சிறப்பு நீதிபதி சுனில் ராணா, வரும் 7-ம் தேதி இந்திராணியை கோர்ட்டில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். #tamilnews
Tags:    

Similar News