செய்திகள்

மும்பை, டெல்லி, குஜராத்தில் தொடர் குண்டு வெடிப்பு நடத்திய முக்கிய தீவிரவாதி பிடிபட்டான்

Published On 2018-01-22 09:30 GMT   |   Update On 2018-01-22 09:30 GMT
மும்பை, டெல்லி, குஜராத் மாநிலங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பங்களில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதியை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர். #IndianMujahideen #AbdulSubhanQureshi
புதுடெல்லி:

மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ரெயில்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அதுபோல ஆமதாபாத்தில் 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி அடுத்தடுத்து 21 குண்டுகள் வெடித்தன. அதில் 46 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி டெல்லியிலும் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன.

இந்த தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியவன் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி அப்துல்சுபான் கியூரசி என்ற தாகீர் என்று தெரிய வந்தது. இவனை தேசிய விசாரணை குழுவினர் கடந்த 8 ஆண்டுகளாக தேடி வந்தனர்.

ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக அவன் போலீசாரிடம் பிடிபடாமல் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு கடும் சவாலாக திகழ்ந்தான். இந்த நிலையில் அவன் டெல்லியில் ஊடுருவி இருப்பதாக நேற்று டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

டெல்லியில் அவன் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். சிறப்பு போலீஸ் கமி‌ஷனர் ஒபேராய் தலைமையில் போலீஸ் படை ஒன்று இன்று அதிகாலை அவன் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தது.

போலீசாரை கண்டதும் அவன் தப்ப முயன்றான். இதையடுத்து அவனுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. பிறகு அவனை போலீசார் மடக்கி பிடித்தனர்.

சிமி இயக்கத்தில் இவன் மிக முக்கிய தலைவனாக திகழ்ந்தான். இந்த இயக்கத்திற்கு தடை வந்ததும் அவன் வேறு சில தீவிரவாதிகளுடன் சேர்ந்து இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை தொடங்கினான்.

வெடிகுண்டுகள் தயாரிப்பில் இவன் சிறப்பு பயிற்சி பெற்று இருந்தான். குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டுகளை தயாரிப்பதில் கில்லாடி. அப்படி அவன் தயாரித்த குண்டுகளைதான் அவன் தொடர் குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தினான்.

அவன் உதவியால்தான் டெல்லி, மும்பை, ஆமதாபாத் நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. ஆமாதாபாத்தில் அவனே குண்டுகளை கொண்டு சென்று வைத்தான். அடுத்து டெல்லிக்கு அவன் குறி வைத்திருந்தான். அதிர்ஷ்டவசமாக அவன் இன்று போலீசாரிடம் சிக்கி உள்ளான்.

அப்துல்சுபான் கியூரசி மும்பையைச் சேர்ந்தவன். அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தான். கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதில் கைதேர்ந்தவன்.

சிமி இயக்கத்தில் இருக்கும் போது தீவிரவாதிகளுக்கு இடையேயான கம்ப்யூட்டர் பதிவுகளை இவன்தான் கையாண்டு வந்தான். அடுத்து அவன் கைவரிசை காட்டுவதற்குள் பிடிபட்டுள்ளதால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். #IndianMujahideen #AbdulSubhanQureshi
Tags:    

Similar News