செய்திகள்

அரசியல் படுகொலைகளால் கேரளாவின் மதிப்புக்கு பாதிப்பு: கவர்னர் வேதனை

Published On 2018-01-21 04:26 GMT   |   Update On 2018-01-21 04:26 GMT
தொடர் அரசியல் படுகொலைகளால் கேரளாவின் நன்மதிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கவர்னர் சதாசிவம் வேதனை தெரிவித்துள்ளார். #Kerala #KeralaGovernor #Sathasivam
திருவனந்தபுரம்:

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் அரசியல் மோதல்களும் அதிகரித்து உள்ளது.

கம்யூனிஸ்டு கட்யினருக்கும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும் இடையே நடைபெறும் அரசியல் மோதல்கள் பல இடங்களில் கொலையில் முடிந்துள்ளது. மேலும் கடை அடைப்பு போன்று நடைபெறும் போராட்டங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களிடையே நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது.

சமீபத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த மாவட்டமான கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஷியாம் பிரசாத் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த முகம்மது பஷீர், சலீம், சகீம், சமீர் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த கொலையை கண்டித்து கண்ணூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா சார்பில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கேரளாவில் நடைபெறும் அரசியல் படுகொலைகளுக்கு கேரள கவர்னர் சதாசிவம் வேதனை தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த நிஷாகந்தி மேளா என்ற கலாச்சார விழாவில் கலந்து கொண்டு பேசிய கவர்னர் சதாசிவம் கூறியதாவது:-

கேரளாவில் நடைபெற்று வரும் அரசியல் கொலைகளால் மாநிலத்தில் சமாதானம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. கண்ணூரில் நடந்த கொலையும் இதற்கு ஒரு உதாரணம். தொடர் அரசியல் படுகொலைகளால் கேரளாவின் நன்மதிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சட்டம்-ஒழுங்கும் சீர்குலைந்து விட்டது. குற்றச்செயல்களில் ஈடுபட்டால் தண்டனை கிடைக்கும் என்ற எண்ணத்தை அனைவரிடமும் உருவாக்க வேண்டும். போலீசாரும் உளவுத்துறையினரும் இதற்காக இணைந்து செயல்பட வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், மாநிலத்தில் சமாதானம் நிலவ முயற்சி செய்ய வேண்டும். இது போன்ற கலாச்சார விழாக்கள் மக்கள் மனதில் அமைதியை உண்டாக்கும்.

இவ்வாறு அவர் பேசினார். #Kerala #KeralaGovernor #Sathasivam
Tags:    

Similar News