செய்திகள்

ஆதரவின்றி தவித்த 100 வயது மூதாட்டியை தாயாக தத்தெடுத்த கலெக்டர்

Published On 2018-01-17 06:56 GMT   |   Update On 2018-01-17 06:56 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆதரவின்றி தவித்த 100 வயது மூதாட்டியை பைசாபாத் மாவட்ட கலெக்டர் தனது தாயாக தத்தெடுத்த சம்பவம் நடந்துள்ளது.
பைசாபாத்:

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டம் மும்தாஜ்நகர் கிராமத்தில் வசிக்கும் மூதாட்டி ரமாபதி. 100 வயதாகும் இவர் அந்த கிராமத்தில் ஆதரவின்றி தவித்து வந்தார்.

தானாகவே சமைத்து சாப்பிட்டு வரும் அவர் தற்போது குளிர்காலம் என்பதால் குளிரில் நடுங்கியபடி இருக்கிறார். தனக்கு ஆதரவு இல்லாததால் மாவட்ட கலெக்டரை சந்தித்து உதவி கேட்க அவரது அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கிருந்த கலெக்டரின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உள்ளே விட மறுத்து விட்டனர். இதனால் அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஆலோசனை கூட்டத்தில் இருந்த கலெக்டர் பதக் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.

ரமாவதியை தானே கையை பிடித்து உள்ளே அழைத்து சென்று தனது இருக்கையில் அமர வைத்து குறையை பரிவுடன் கேட்டறிந்தார். அவருக்கு டீயும், பிஸ்கட்டுகளும் வரவழைத்து கொடுத்து உபசரித்தார்.

மூதாட்டியின் குறையை கேட்ட கலெக்டர் தானே அவரை தாயாக தத்து எடுத்து உதவிகள் செய்வதாக அறிவித்தார்.

இதுபற்றி கலெக்டர் பதக் நிருபர்களிடம் கூறுகையில், “நான் ரமாபதியை தத்து எடுத்து இருக்கிறேன். எனது தாயாக அவரை கவனித்துக் கொள்வேன். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரமாபதியின் சொந்த கிராமத்தில் வீடு ஒதுக்கீடு செய்து தரவும், வாழ்நாள் முழுவதும் முதியோர் பென்சன், ரேசன் கார்டு, கியாஸ் இணைப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

மேலும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து டாக்டர் ஒருவர் தினமும் ரமாபதியின் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டு இருப்பதாக கலெக்டர் பதக் தெரிவித் தார்.

முன்னதாக ரமாபதியின் ஆவணங்களை ஆய்வு செய்து அவருக்கு 100 வயது கடந்து விட்டதையும் கலெக்டர் உறுதி செய்தார்.

ரமாபதி கிராமத்துக்கு புறப்பட்டு செல்லும் முன் அவருக்கு செலவுக்காக கலெக்டர் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5,000 எடுத்துக் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

இதுபற்றி மூதாட்டி பத்மாவதி கூறுகையில், ஆதரவின்றி தவித்த நான் ஒவ்வொரு முறையும் கலெக்டரை சந்திக்க வந்த போது இங்கிருந்தவர்கள் என்னை தடுத்து விட்டனர். இன்று கலெக்டரை சந்தித்த தால் எனக்கு விடிவு பிறந்தது என்றார் மகிழ்ச்சியுடன். #tamilnews
Tags:    

Similar News