செய்திகள்

காதல் திருமணம் செய்தவர்களை தாக்குவது சட்டவிரோதம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2018-01-17 00:11 GMT   |   Update On 2018-01-17 00:11 GMT
காதல் திருமணம் செய்தவர்களை தாக்குவது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. #InterCaste #Marriage
புதுடெல்லி:

காதல் திருமணம் செய்தவர்களை தாக்குவது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் ஷக்தி வாஹினி என்ற தொண்டு நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ‘காப் பஞ்சாயத்து’ (சமுதாய அமைப்பினர்) என்ற அமைப்பினர், சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த தம்பதிகளை துன்புறுத்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இது சட்டவிரோதமானது. இதனை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.



இந்த மனுவை அப்போது விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மூத்த வக்கீல் ராஜூ ராமச்சந்திரன் என்பவரை கோர்ட்டுக்கு உதவும் வக்கீலாக (அமிகஸ் க்யூரி) நியமித்தது. இவர் ஏற்கனவே உத்தரபிரதேச அரசுக்கு எதிராக விகாஸ் யாதவ் என்பவர் தொடுத்த வழக்கில், ‘சாதி மறுப்பு காதல் திருமணம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது ‘காப் பஞ்சாயத்து’ அமைப்பினர் காதல் தம்பதியை உடல்ரீதியாக தாக்குவதற்கு எந்த உரிமையும் கிடையாது. ஒரு பெண்ணின் மணத்தேர்வு என்பது அவரது சுயமரியாதை சம்பந்தமானது. அந்த சுயமரியாதை அல்லது கவுரவத்தில் யாரும் கேடு விளைவிக்க முடியாது. இதில் குடும்ப கவுரவம் அல்லது சாதி கவுரவத்தை தொடர்புபடுத்துவது உச்சகட்ட குற்றச்செயலாகும். மிகவும் கடுமையான தண்டனைக்கு உரிய குற்றமாகும்’ என்று கோர்ட்டுக்கு எழுத்துபூர்வமாக ஆலோசனை வழங்கி இருந்தார்.

இந்த ஆலோசனை தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை பாதுகாக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசின் கருத்தை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கேட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று ஷக்தி வாஹினி தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை துவங்கியதும் மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், இந்த ஆலோசனை தொடர்பாக மத்திய அரசின் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் தேவை என்று தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், ‘காப் பஞ்சாயத்து’ பற்றி ‘அமிகஸ் க்யூரி’யின் ஆலோசனை ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு ஆணோ, பெண்ணோ தனது துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தின் மீது இந்த கோர்ட்டு அக்கறை கொள்கிறது. இதுகுறித்து தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் இதுவரை மத்திய அரசு ஏன் தனிச்சட்டம் இயற்றவில்லை?. உடனடியாக சட்டம் இயற்றாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டு தனிச்சட்டம் கொண்டு வரும்.

வயது வந்த ஆணும், பெண்ணும் அவரவர் விருப்பப்படி காதல் திருமணம், சாதி மறுப்பு திருமணம் செய்ய முழு உரிமை உள்ளது. ‘காப் பஞ்சாயத்து’ மூலம் அவர்கள் மீது குற்றச்செயலை அனுமதிப்பது மிகவும் தவறானதாகும். காதல் திருமணம் செய்தவர்களை தாக்குவது சட்டவிரோதம். இதுபோல் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆலோசனைகளின் நகல்களை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலிடம் அளிக்க வேண்டும். மத்திய அரசு 2 வார காலத்திற்குள் தங்கள் கருத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #InterCaste #Marriage #tamilnews
Tags:    

Similar News