செய்திகள்

இந்திய மீனவர்கள் 144 பேர் விடுதலை: வாகா-அட்டாரி எல்லை வழியாக இந்தியா வந்தனர்

Published On 2017-12-29 16:06 GMT   |   Update On 2017-12-29 16:06 GMT
நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 144 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். #IndianFisherman #Pakistanrelease

புதுடெல்லி:

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் மற்றும் இந்திய மீனவர்கள் பரஸ்பரம் இருநாட்டு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

அவ்வகையில், கடந்த ஒருமாத காலத்தில் மட்டும் 114 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். இந்த ஆண்டில் பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை சுமார் 400 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் 145 இந்திய மீனவர்களை சிறைகளில் இருந்து விடுதலை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.



இதையடுத்து, பல்வேறு சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள் கராச்சி நகரில் இருந்து லாகூருக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். லாகூரில் இருந்து இன்று மாலை வாகா எல்லைப்பகுதிக்கு அழைத்துவரப்பட்ட மீனவர்கள் அங்குள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடந்த வாரம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த ஒரு அறிவிப்பில் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததற்காக கைதான 291 இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று 144 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 147 பேர் வரும் ஜனவரி 8-ம் தேதிக்குள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

#IndianFisherman #Pakistanrelease #AttariWagahborder
Tags:    

Similar News