செய்திகள்

காஷ்மீர்: பனிச்சரிவில் மாயமான தமிழக வீரர் மூர்த்தியின் உடல் மீட்பு

Published On 2017-12-20 05:53 GMT   |   Update On 2017-12-20 05:53 GMT
ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் மாயமான தமிழக வீரர் மூர்த்தியின் உடல் குரஸ் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த வீரர் உட்பட 5 பேர் மாயமாகினர். காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே குரஸ் செக்டார் பகுதியில் ராணுவச் சாவடி உள்ளது. கடந்த 12-ம் தேதி இந்த ராணுவச்சாவடி அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் மாயமாகினர்.

இதையடுத்து, அங்கு மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு மாயமான வீரர்களை மீட்கும் பணி தொடங்கியது. ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் குருஸ் செக்டாரில் 2 ராணுவ வீரர்களின் உடல்களும், நவ்காம் செக்டாரில் ஒரு ராணுவ வீரரின் உடலையும் மீட்பு படையினர் இரண்டு நாட்களுக்கு முன் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், குருஸ் செக்டாரில் காணாமல் போன் தமிழகத்தைச் சேர்ந்த வீர்ர் மூர்த்தியின் உடல் நேற்று மீட்கப்பட்டது. மற்றொரு உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மூர்த்தி தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர்பக்கம் களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். அவர் காணாமல் போனது குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் களத்துப்பட்டியில் வசித்து வரும் மூர்த்தியின் மனைவி தமிழரசிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இதனால் தமிழரசி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தனது கணவரை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி கரூர் மாவட்ட கலெக்டரிடம் தமிழரசி மனு அளித்தார்.

பனிச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் 110 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 4 மோப்பநாய்களும் களத்தில் இறக்கி விடப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் 3 வீரர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். மூர்த்தியை மட்டும் தேடும் பணி கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்தது. அவரது நிலைமை என்ன ஆனது என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவிப்புக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், நேற்று மாலை மூர்த்தி காஷ்மீர் பனிச்சரிவின் ஒரு பகுதியில் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரிகள், மூர்த்தியின் மனைவி தமிழரசியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அதில் பேசிய அதிகாரி, மூர்த்தி இறந்து விட்டதாகவும், அவரது உடலை மீட்பதற்கான பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை கேட்ட தமிழரசி அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். உயிருடன் மீட்கப்பட்டு விடுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் மூர்த்தி இறந்து விட்டதாக கூறியதால் களத்துப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

பனிச்சரிவில் சிக்கி இறந்த ராணுவ வீரர் மூர்த்தியின் உடல் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனை முடிந்ததும், விமானம் மூலம் டெல்லி அல்லது கோவைக்கு இன்று அல்லது நாளை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

பலியான மூர்த்தி ராணுவத்தில் கடந்த 14 ஆண்டுகளாக கன்மேனாக பணியாற்றி வந்துள்ளார். மூர்த்திக்கு சுபிக்சன் (6), மெர்வின் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். தேசப்பற்று மிகுந்த மூர்த்தி ராணுவத்தை மிகவும் நேசித்து வந்துள்ளார். அதனாலேயே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.

தனது மகன்களான சுபிக்சன், மெர்வின் இருவரும் வளர்ந்த பிறகு அவர்களையும் ராணுவத்தில் சேர்க்கப் போவதாக மனைவி தமிழரசியிடம் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News