செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி நாளை பார்வையிடுகிறார்

Published On 2017-12-18 01:44 GMT   |   Update On 2017-12-18 01:44 GMT
‘ஒக்கி’ புயலால் பாதிக்கப்பட்ட கேரளா, லட்சத்தீவு மற்றும் குமரி மாவட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை பார்வையிடுகிறார்.
திருவனந்தபுரம்:

அரபிக்கடலில் உருவான ‘ஒக்கி’ புயல் கடந்த 30-ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் குமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானதுடன், கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன. குமரி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற பல மீனவர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் மாயமாகி உள்ளனர்.

இந்த பிராந்தியங்களை உருக்குலைத்த ‘ஒக்கி’ புயல் பின்னர் லட்சத்தீவிலும் தனது கொடூர முகத்தை காட்டியது. அங்கும் பல பகுதிகள் புயலுக்கு இரையாகி உள்ளன. அங்கும் கடற்கரை பகுதிகள் சின்னாபின்னமாகி விட்டன.

‘ஒக்கி’ புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படையினர் ஈடுபட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசுகள் சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடமும் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

கேரள மீனவ கிராமங்களின் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.1,843 கோடி உதவி கேட்டு மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 14-ந்தேதி குமரி மற்றும் கேரளாவில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ‘ஒகி’ புயல் பாதிப்பு குறித்து பாராளுமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்தார்.

இந்த நிலையில் புயல் தாக்கிய பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டம் மற்றும் கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று நள்ளிரவில் விமானம் மூலம் அவர் மங்களூருவுக்கு வருகிறார்.

பின்னர் அங்கிருந்து நாளை காலை லட்சத்தீவுக்கு உட்பட்ட அகாத்தி தீவுக்கு சென்று, அங்கு புயலால் விளைந்த சேதங்களை பார்வையிடுகிறார். பின்னர் அவர் விமானம் மூலம் பிற்பகலில் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து நேராக குமரி மாவட்டத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.



அதைத்தொடர்ந்து மீண்டும் திருவனந்தபுரம் செல்லும் பிரதமர், அங்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் புயல் நிவாரண உதவிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் அங்கு புயல் பாதித்த பகுதிகளையும் அவர் பார்வையிடுகிறார். பின்னர் இந்த நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மாலை 6.05 மணிக்கு விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

பிரதமரின் இந்த பயண விவரங்கள் தொடர்பாக கேரள மாநில அரசுக்கு அதிகாரப்பூர்வ தகவல்களை பிரதமர் அலுவலகம் வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து பிரதமரின் பயணத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடாதது குறித்து கேரள இடதுசாரி அரசும், எதிர்க்கட்சியான காங்கிரசும் மோடியை குறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News