செய்திகள்

கேட்காமலேயே வங்கி கணக்கு: ஏர்டெல் நிறுவனத்துக்கு எதிராக தேசிய அடையாள அட்டை ஆணையம் அதிரடி

Published On 2017-12-16 13:21 GMT   |   Update On 2017-12-16 13:21 GMT
கைபேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு செய்யும் வாடிக்கையாளர்கள் பெயரில் கேட்காமலேயே வங்கி கணக்குளை தொடங்க ஏர்டெல் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கைபேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு செய்யும் வாடிக்கையாளர்கள் பெயரில் உள்ள வங்கி கணக்கு விபரங்களை ‘கே.ஒய்.சி.’ மூலம் அறிந்துகொள்ளும் ஏர்டெல் நிறுவனம் தங்களது சிம் கார்டை பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்களை கேட்காமலேயே அவர்கள் பெயரில் ’ஏர்டெல் பேங்கிங்’ வங்கி கணக்குளை தொடங்குவதாக புகார்கள் எழுந்தன.

இதன்மூலம், கியாஸ் சிலிண்டருக்கான மானியம் உள்ளிட்ட சமூக நலத்திட்ட உதவிகளுக்கான தொகை ஏர்டெல் நிறுவனத்துக்கு சொந்தமான ’ஏர்டெல் பேங்கிங்’ வங்கி கணக்குகளுக்கு போய் சேர்ந்து விடுவதாக குற்றம்சாட்டப்பட்டது. ஒருவரின் ஒப்புதலை பெறாமல் அவரது விருப்பத்துக்கு மாறாக தாமாகவே முன்வந்து வங்கி கணக்குகளை ஏர்டெல் நிறுவனம் தொடங்குவது தனிநபர் உரிமையை மீறும் செயலாகும் என பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டனர்.

தங்களுக்கு தெரியாமலேயே ஏர்டெல் நிறுவனத்தால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகளில் சுமார் 47 கோடி ரூபாய் மடைமாற்றி விடப்பட்டதை அறிந்து 23 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

எனவே, இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஆதார் எனப்படும் தேசிய அடையாள அட்டைகளை தயாரித்து வழங்கும் ’ UIDAI’ எனப்படும் யூனிக் ஐடென்ட்டிபிகேஷன் அத்தாரிட்டி ஆப் இந்தியா சமீபத்தில் தீர்மானித்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. புதிதாக வங்கி கணக்குகள் தொடங்குவது நிறுத்தப்பட்டதாக ஏர்டெல் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பதில் திருப்தி அளிக்காததால் நவம்பர் 24-ம் தேதி மற்றொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் நாங்கள் வங்கி கணக்குகளை ஆரம்பிக்கவில்லை. போதுமான பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்துதான் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன என பதில் அளிக்கப்பட்டது. 

இந்த பதிலும் திருப்தியளிக்காத நிலையில், தங்களது சிம் கார்டுகளை பயன்படுத்துபவர்களின் இதர வங்கி கணக்குகள் உள்ளிட்ட தனிநபர் விவகாரங்களில் ‘கே.ஒய்.சி.’ மூலம் ஊடுருவி தகவல்களை அறிந்துகொள்ள ஏர்டெல் பாரதி நிறுவனத்துக்கு முன்னர் அளிக்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்து தேசிய அடையாள அட்டைகளை தயாரித்து வழங்கும் ’ UIDAI’  இன்று உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News