செய்திகள்

ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை நிறுத்த வேண்டும்: இந்திராவின் நண்பர் மகன் பேட்டி

Published On 2017-12-16 06:23 GMT   |   Update On 2017-12-16 06:23 GMT
சோனியா வென்ற ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை நிறுத்த வேண்டும் என்று இந்திராகாந்தியின் ஆன்மிக குருவாக கருதப்பட்டவரின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதி நேரு குடும்பத்து தலைவர்களின் பிரியமான தொகுதியாக உள்ளது.

1967-ம் ஆண்டு இந்திரா காந்தி முதன் முதலாக இந்த தொகுதியில் இருந்துதான் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 2004, 2006, 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் இந்த தொகுதியில் நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக 4 தடவை வென்று எம்.பி. ஆக உள்ளார். இந்த நிலையில் 2019-ம் ஆண்டு வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் அவர் மீண்டும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக அவர் 2019 தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் ரேபரேலி தொகுதியில் போட்டியிப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை நிறுத்த வேண்டும் என்று இந்திராகாந்தியின் ஆன்மிக குருவாக கருதப்பட்டவரின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திராவின் குருவாக போற்றப்பட்ட அந்த நபரின் பெயர் கயா பிரசாத்.

ரேபரேலி தொகுதியில் இந்திரா, சோனியா போட்டியிட மனு செய்யும் போதெல்லாம் இவர்தான் அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்துவார். கடந்த 2010-ம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார்.

அவரது மகன் ஜெகதீஷ் சுக்லா தனது விருப்பம் பற்றி கூறியதாவது:-


ரேபரேலி தொகுதியில் பிரியங்காகாந்தி போட்டியிட வேண்டும். அவர் இந்திராகாந்தி போன்று இருப்பதாக அடிக்கடி எனது தந்தை சொல்வார்.

ராகுலின் அரசியல் வாழ்க்கைக்கு பிரியங்கா உதவியாக இருக்க வேண்டும். அதற்கு அவசியம் பிரியங்கா ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.

ராகுல்காந்தி இந்து மதத்தை சேர்ந்தவரா? என்று குஜராத் தேர்தலின் போது சிலர் சந்தேகம் எழுப்பினார்கள். அவர் இந்து என்பதற்கு எத்தனையோ ஆதாரம் உள்ளது. அதை நிரூபித்து காட்ட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News