செய்திகள்

பீகார் மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: தலைமை செயலாளருக்கு 5 ஆண்டு ஜெயில்

Published On 2017-11-23 06:14 GMT   |   Update On 2017-11-23 06:14 GMT
பீகாரில் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான வழக்கில் தலைமை செயலாளருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ராஞ்சி:

பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் முதல்-மந்திரியாக இருந்த போது ரூ.950 கோடிக்கு மாட்டுத்தீவன ஊழல் நடந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி லல்லு பிரசாத் யாதவ் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்தது.

இதனால் லல்லு பிரசாத் யாதவ் பதவி விலகினார். அதன்பிறகு அவர் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் ரெயில்வே மந்திரியானார். இந்த நிலையில் மாட்டுதீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அவர் ஜாமீனில் வந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் வழக்கு விசாரணை மீண்டும் ராஞ்சி கோர்ட்டில் நடந்து வருகிறது.



இதற்கிடையே மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சஜல் சக்ரவர்த்தி மீது தனியாக ராஞ்சி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவர் பீகார் மாநிலம் சாய்பாசா மாவட்ட கலெக்டராக இருந்த போது அரசு கருவூலத்தில் இருந்து ரூ.37 கோடி பணம் எடுத்து மாட்டுத்தீவன சப்ளையாளர்களுக்கு வழங்கியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சஜல் சக்ரவர்த்தி 2014-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு பின்னர் 2015 ஜனவரி மாதம் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.



ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டு ஊழல் வழக்கை விசாரித்து அவரை குற்றவாளி என கடந்த 14-ந்தேதி அறிவித்தது. நேற்று தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார். அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி சஜல் சக்ரவர்த்திக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

சஜல் சக்ரவர்த்தி ஏற்கனவே 18 மாதம் 16 நாட்கள் சிறையில் இருந்த தால் மீதம் உள்ள காலத்தை ஜெயிலில் கழிக்க வேண்டும்.

முன்னதாக சஜல் சக்ரவர்த்தியின் வக்கீல் வாதாடும் போது, அவர் இருதய அறுவை சிகிச்சை செய்தவர் 5 ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது. முழங்கால் வலி மற்றும் நீரிழிவு போன்றவற்றால் அவதிப்படுவதாகவும் குறைந்த தண்டனை வழங்கு மாறும் கேட்டுக் கொண்டார். அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.
Tags:    

Similar News