செய்திகள்

மக்களின் உணர்வுகளுடன் விளையாடுபவர்: பத்மாவதி பட இயக்குநர் மீது உ.பி. முதல்வர் பாய்ச்சல்

Published On 2017-11-21 10:33 GMT   |   Update On 2017-11-21 10:33 GMT
சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பத்மாவதி பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டவர் என உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
லக்னோ:

சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த தீபிகா படுகோனே மற்றும் இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கொடும்பாவிகளை எரித்த ஒரு அமைப்பினர், தீபிகாவை உயிருடன் எரித்து கொல்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை உத்தரப்பிரதேசம் உள்பட நாட்டின் பல மாநிலங்களில் இந்த படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மாவதி படக்குழுவினருக்கு பெருகிவரும் மிரட்டல் தொடர்பாக கோரக்பூர் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சஞ்சய் லீலா பன்சாலி உள்பட சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்பவர்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்துளார்.



பத்மாவதி படத்தில் நடித்தவர்களுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குற்ற உணர்வு கொண்டவர்கள்தான். அதே வேளையில் சஞ்சய் லீலா பன்சாலியும் குற்ற உணர்வில் குறைந்தவர் அல்ல என குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டவர். இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதானால், இருதரப்பினர் மீதும் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News