செய்திகள்

சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: டிரம்ப் மகள் ஐதராபாத் வருகை

Published On 2017-11-21 08:01 GMT   |   Update On 2017-11-21 08:01 GMT
ஐதராபாத்தில் நடைபெற இருக்கும் தொழில் முனைவோர் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நகரி:

சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு வருகிற 28-ந்தேதி ஐதராபத்தில் நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொள்கிறார். அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வருகிறார். ஐதராபாத்தில் இவர் 3 நாட்கள் தங்குகிறார்.

இவாங்கா டிரம்ப் வருகையையொட்டி ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா டிரம்புக்கு 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. முதல் 2 அடுக்குகளில் அமெரிக்க ரகசிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் 3-வது அடுக்கு பாதுகாப்பை கவனிக்கின்றனர். அதையடுத்து 4 மற்றும் 5-வது அடுக்கு பாதுகாப்பில் தெலுங்கானா உளவுப் பிரிவு பாதுகாப்பு போலீசார் ஈடுபடுகின்றனர். இவர்கள் தீவிரவாத தடுப்பு பயிற்சி மேற்கொண்டவர்கள்.

இவாங்காவுக்கு மிரட்டல்கள் இருப்பதால் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவர் வெஸ்டின் ஓட்டலில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே உள்ளது.

அதே நேரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையிலும் தங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இங்கு தெலுங்கானா அரசு சார்பில் இவருக்கு முதல்-மந்திரி சந்திர சேகரராவ் விருந்து அளிக்கிறார். அதற்காக இந்த அரண்மனை ஓட்டல் போன்று மாற்றப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தான் ஓட்டல் நிர்வாகம் செய்துள்ளது.

இவாங்கா வருகையையொட்டி அமெரிக்காவின் ரகசிய போலீஸ் குழு பல தடவை ஐதராபாத் வந்து ஓட்டல்கள், மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஐதராபாத்தில் இவாங்கா டிரம்ப் பயணம் செய்ய அமெரிக்க உளவுப்படை குண்டு துளைக்காத புல்லட்‘புரூப்’ கார்களை கொண்டு வருகிறது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் வரவழைக்கப்படுகின்றன. மொத்தத்தில் அமெரிக்க அதிபருக்குரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்தார்.

ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா சார்மினார், லாட் பஜார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார். பிரதமர் மோடியுடன் விருந்தில் பங்கேற்கிறார். மேலும் அவர் வரலாற்று சிறப்புமிக்க கோல்கோண்டா கோட்டை பகுதிக்கு சென்று ஷாப்பிங் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் வருகையையொட்டி ஐதராபாத் ரோட்டில் நடமாடும் பிச்சைக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News