செய்திகள்

மணிப்பூர்: துப்பாக்கிச் சண்டையில் பலியான வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் - முதல்வர் உத்தரவு

Published On 2017-11-16 22:00 GMT   |   Update On 2017-11-16 22:00 GMT
மணிப்பூர் மாநிலத்தில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள சண்டேல் மாவட்டத்துக்கு உட்பட்ட சாஜிக் மற்றும் சமோல் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள சண்டேல் மாவட்டத்துக்கு உட்பட்ட சாஜிக் மற்றும் சமோல் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, அந்த பகுதிக்கு தீவிரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரும் சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்நிலையில், தீவிரவாதிகளுடனான தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினருக்கு நிவாரண உதவியாக ரூ.20 லட்சம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தீவிரவாதிகளுடனான சண்டையில் பலியான வீரர்கள் குடும்பத்துக்கு நிவாரணமாக தலா 20 லட்சம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய அதிகாரிகள், அவர்களுக்கு தேவையான மருத்துவ செலவினங்களை அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News