செய்திகள்

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்தது - 213 பொருட்களின் விலை குறைந்தது

Published On 2017-11-16 02:59 GMT   |   Update On 2017-11-16 03:55 GMT
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 23-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட வரி குறைப்பு நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் 213 பொருட்களின் விலை குறைந்தது.
புதுடெல்லி:

அசாம் மாநிலம், கவுகாத்தியில் சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 23-வது கூட்டத்தில் 213 பொருட்களின் வரி விகிதங்களை மாற்றி அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்துகிற 178 பொருட்களின் வரி விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 2 பொருட்களின் வரி விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், 13 பொருட்களின் வரி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், 6 பொருட்களின் வரி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், 8 பொருட்களின் வரி வகிதம் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் மாற்றப்பட்டது. 6 பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிப்பு விலக்கிகொள்ளப்பட்டது.

இந்த வரி குறைப்பு சலுகை மக்களை சென்றடைய வேண்டும் என்று மத்திய அரசு கருதி, வருவாய்த்துறை முறைப்படி அறிவிக்கை வெளியிட்டது.

அதன்படி புதிய வரி விதிப்பு மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.

இதனால் வயர், பர்னிச்சர், மெத்தை, சூட்கேஸ், சலவைத்தூள், ஷாம்பு, மின்விசிறிகள், விளக்கு, ரப்பர் டியூப், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, நீரிழிவு நோயாளிகளின் உணவு, மருத்துவ ஆக்சிஜன், மூக்கு கண்ணாடி, தொப்பி, உருளைக்கிழங்கு பவுடர் உள்ளிட்ட 213 பொருட்களின் விலை குறைந்துள்ளது.

அனைத்து உணவகங்களிலும் ஒரே சீராக 5 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது.

Tags:    

Similar News