செய்திகள்

மேற்கு வங்காளம் v ஒரிசா: ஒரு வழியாக முடிவுக்கு வந்தது ‘ரசகுல்லா’ பஞ்சாயத்து

Published On 2017-11-14 09:34 GMT   |   Update On 2017-11-14 09:34 GMT
இனிப்பு வகையான ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெறுவதில் மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கிடையே போட்டி இருந்த நிலையில், ரசகுல்லாவின் புவிசார் குறியீடு மேற்கு வங்காளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா:

புவியியல் சார்ந்த குறியீடு (Geographical indication) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

1999-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் புவிசார் குறியீட்டு சட்டம் இயற்றப்பட்டது. உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா அதில் உள்ள ஒப்பந்தப்படி இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் மூலம் வர்த்தகம் தொடர்பான தாவாக்களைத் தவிர்க்கவும், காப்புரிமை சட்டத்தையும், புவிசார் குறியீட்டையும் அளிக்கிறது.

காஞ்சிபுரம் பட்டு சேலைகள், திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன்ஸ், சேலம் மாம்பழம் உள்ளிட்ட 193 பொருள்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.. இதனால், வேறு பகுதியில் மேற்கண்ட உணவுப் பொருட்களை அதே பெயரில் பிரபலப்படுத்த முடியாது.

குறிப்பிட்ட பொருளுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கும் போது அப்பொருள் அந்த இடத்தில் உருவானதற்கான வரலாற்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களின் நம்பகத்தன்மைக்கேற்ப புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.



சில மாதங்களுக்கு முன்னர், ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு கோரி ஒடிசா மாநில அரசு விண்ணப்பித்துள்ளது. ஆனால், ஒடிசாவின் கோரிக்கையை ஏற்க கூடாது ரசகுல்லா எங்களுக்குதான் சொந்தம் என்று மேற்கு வங்காளம் மாநிலமும் காப்புரிமை கோரியிருந்தது.

ஒடிசா மாநிலத்தில் தலைநகர் புவனேஸ்வரத்துக்கும் கட்டாக் நகருக்கும் இடையே உள்ள பஹாலா எனும் கிராமத்தில்தான் தொடக்க காலத்தில் தயாரிக்கப்பட்டது என்று ஒடிசா தனது வாதத்தில் கூறியிருந்தது. மேலும், பூரி ஜெகன்னாதர் கோவிலின் தேர் திருவிழா முடிவில் கடவுளுக்கு நைவேத்ய பண்டம் ரசகுல்லாதான். இந்த ஆலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரசகுல்லா நைவேத்தியம் செய்யப்பட்டதற்கான சான்றுகள் உள்ளதாகவும் ஒடிசா அரசு கூறியது.

ஒடிசா கதை இப்படியிருக்க, ரசகுல்லா என்றால் அது பெங்காளி ஸ்வீட்தான் என்று எடுத்த எடுப்பிலேயே உரிமை கொண்டாடினர் கொல்கத்தாவாசிகள். 1866-ம் ஆண்டு வடக்கு கொல்கத்தாவில் பாக்பஜார் என்னுமிடத்தில் நோபின் சந்திரதாஸ் முதன் முதலில் ரசகுல்லாவை தயாரித்து விற்பனை செய்துள்ளதாக வரலாற்று ஆதாரம் காட்டினர் வங்காளிகள்.

கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் பழமையான கே சி தாஸ் இனிப்பகத்தில் தயாராகும் ஆரஞ்சு, மாம்பழ ரசகுல்லா மற்றும் வெல்லத்தில் தயாராகும் ரசகுல்லா இனிப்பு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலம்.

ஒடிசா ரசகுல்லா வேறு எங்கள் ரசகுல்லா வேறு. எங்கள் ரசகுல்லா தான் ஒரிஜினல் அயிட்டம். எனவே, மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீடு அளிக்கப்பட வேண்டும் என மேற்கு வங்காளம் மாநிலம் ஒற்றைக்காலில் நின்றது.

ரசகுல்லாவுக்கான காப்புரிமை யாருக்கு கிடைக்குமோ? என்ற மிகப்பெரிய சஸ்பென்ஸ் தற்போது உடைந்துள்ளது. ரசகுல்லாவின் பூர்விகம் மேற்கு வங்காளம்தான் என புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு வென்ற பூரிப்பில் அம்மாநில முதல்வர் மம்தா பாணர்ஜி, ‘இனிப்பான செய்தி நமக்கு கிடைத்திருக்கிறது. ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளித்திருக்கிறது’ என மகிழ்ச்சி பொங்க தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News