செய்திகள்

இமாச்சல் தேர்தல்: இந்தியாவின் மிக மூத்த வாக்காளர் ஓட்டை பதிவுசெய்தார்

Published On 2017-11-09 12:28 GMT   |   Update On 2017-11-09 12:29 GMT
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் வாக்களித்தவரான 101 வயதான ஷியாம் சரன் நெகி, இன்று இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தனது வாக்கை பதிவுசெய்தார்.
ஷிம்லா:

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் இடையே பலப்பரீட்சை நிலவி வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் முதல் ஓட்டு போட்டு வரும் மூத்த வாக்காளரான 101 வயதான ஷியாம் சரன் நெகி, இன்று தனது முக்கிய கடமையான வாக்கை பதிவு செய்தார்.

இவர் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1951-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் வாக்களித்துள்ளார். அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் நெகி தனது வாக்கை தவறாமல் பதிவு செய்துள்ளார். அவர் இதுவரை 16 பாராளுமன்ற தேர்தல்களிலும், 14 சட்டப்பேரவை தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார். 



இமாசலப் பிரதேசம் மாநிலத்தின் கின்னார் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஷியாம் சரன் நெகி தனது வாக்கை இன்று பதிவு செய்துள்ளார். அவரது மனைவியும் வந்திருந்து வாக்களித்தார். அவர் வாக்குச்சாவடி வருவதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் தனி வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது அவர் கூறுகையில், ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனது கடமையை சரிவர செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், ஷியாம் சரன் நெகியை கவுரவிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தூதராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News