செய்திகள்

உ.பி.யில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சுட்டுக்கொலை

Published On 2017-10-22 07:20 GMT   |   Update On 2017-10-22 07:20 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரை சேர்ந்தவர் ராஜேஷ் மிஸ்ரா (வயது 38). ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர் ஆவார். இந்தி பத்திரிகை ஒன்றில் அவர் பணிபுரிந்து வருகிறார்.

ராஜேஷ் மிஸ்ராவும், அவரது சகோதரர் அமிதாப் மிஸ்ராவும் பிரம்மன்புரா சவுராகா பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான கடையில் அமர்ந்து இருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் திடீரென ராஜேஷ் மிஸ்ராவை துப்பாக்கியால் பல முறை சுட்டனர். இதில் தலையில் குண்டு பாய்ந்து ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற சகோதரர் அமிதாப் மிஸ்ராவும் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தார். அவர் உடனடியாக காஜிபூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வாரணாசிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வாகனங்களை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தலையிட்டு அவர்களை அப்புறப்படுத்தினர்.

இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட பகை காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

போலீஸ் உயர் அதிகாரி அனந்த்குமார் கூறும் போது “துப்பாக்கி சூடு நடத்திய 3 பேரில் 2 பேர் அடையாளம் காணப்பட்டு விட்டது. விரைவில் அனைவரும் பிடிபடுவார்கள்” என்றார்.

Tags:    

Similar News