செய்திகள்

அவசர மூலதன செலவுகளை சமாளிக்க 1500 கோடி ரூபாய் கடன் கேட்கும் ஏர் இந்தியா

Published On 2017-10-21 09:26 GMT   |   Update On 2017-10-21 09:26 GMT
கடும் நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனம், அவசர மூலதன செலவுகளை சமாளிப்பதற்காக 1500 கோடி ரூபாய் வங்கிக் கடன் கோரியுள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம் கடும் நஷ்டம் மற்றும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. தற்போது மக்களின் வரிப்பணத்தில் மட்டுமே அந்நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். நிறுவனத்தை லாபகரமாக மாற்றும் மத்திய அரசின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை விற்பனை செய்வதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தற்போதைய செலவுகளை சமாளிப்பதற்கு ஏர் இந்தியா நிறுவனம் குறுகிய கால கடனாக 1500 கோடி ரூபாய் கேட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவாதத்துடன் இந்த தொகையை பெற தனியார் வங்கிகளை ஏர் இந்தியா நாடியுள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அவசர மூலதன செலவுகளை சமாளிக்க, 1500 கோடி ரூபாய் வரை குறுகிய கால கடன் கோரப்பட்டுள்ளது. இந்த கடனுக்கு, மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும். உத்தரவாத காலம், கடன் வழங்கப்பட்ட தேதியில் இருந்து 2018 ஜூன் 27ம் தேதி வரையிலோ, அல்லது பங்கு விற்பனை முடிவுறும் காலம் வரையிலோ இருக்கும்.

விருப்பமுள்ள வங்கிகள், தாங்கள் வழங்க முன்வரும் கடன் தொகையை குறிப்பிட்டு, உரிய ஆவணங்களை, அக்டோபர் 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் உள்ள ஏர் இந்தியா நிறுவனம், அவசர செலவுகளை சமாளிக்க, ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கடன் கோரி டெண்டர் விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News