என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loans"

    • விவசாயம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கான பல்வேறு கடன் திட்டங்கள் வழங்கப்படுகிறது.
    • கடன் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு வாகன சேவை தொடங்கியது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தனியார் வங்கியின் சார்பில் வழங்கப்படும் விவசாயிகளுக்கான கடன் வசதி குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இதையடுத்து, இம்மாவட்டத்தில்கிராமப்புறங்களில் விவசாயிகளின் விவசாயம் சார்ந்த உள்கட்ட மைப்பு மற்றும் அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக தனியார் வங்கியின் சார்பில் டிராக்டர் கடன், கிசான் கோல்டு கார்டு, தங்க நகைக் கடன், சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, கார் கடன், இருசக்கர வாகன கடன், நுகர்வோர் பொருள்களுக்கான கடன், விவசாயகடன், விவசாயம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கான குறு மற்றும் நீண்ட கால கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் வழங்கப்படுகிறது.

    இந்த கடன் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் விதமாக அவ்வங்கியின் சார்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு வாகன சேவை தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி பிரச்சார வாகனத்தை துவக்கிவைத்து விவசாயிகளுக்கு விழி ப்புணர்வை ஏற்படுத்தினர். ஒன்றிய ஆணையர் அன்பரசன், மேலாளர் ஜெயராமன், உடன் இருந்தனர்.

    இதில் தனியார் வங்கியின் மண்டல மேலாளர் வசந்தன், கிளை மேலாளர் சந்தோஷ்குமார், உதவி மேலாளர்கள் ஹரிகிருஷ்ணன், சதீஷ்கு மார், திருமூர்த்தி, பிரேம்குமார், சந்தோஷ்கு மார், பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனுக்கும் இடையேயான தொடா்பு வலுவாக இருந்ததில்லை.
    • புதிய வகை தொழில்களில் ஈடுபட உதவும் விதமாக மாவட்ட வாரியாக தொழில்நுட்பப் பொருளாதார ஆய்வு நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் வல்லம் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம் சாா்பில் நடைபெற்ற தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான தேசிய பட்டியல் இனத்தவா் மற்றும் பட்டியல் பழங்குடியினா் மைய மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணை மந்திரி பானு பிரதாப்சிங் வா்மா பேசியதாவது:

    நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏறத்தாழ 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

    இந்தியப் பொருளாதாரத்துக்கான பாதையாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளன. வலுவான மற்றும் தன்னிறைவு கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் 6 கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    இந்திய பொருளாதாரத்துக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனுக்கும் இடையேயான தொடா்பு வலுவாக இருந்ததில்லை.

    வரும் ஆண்டுகளில் இந்த உறவு இன்னும் நெருக்கமாக மாறும்.

    தற்போது, 1.09 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளன.

    இவற்றில் 11.46 லட்சம் நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சாா்ந்தவை.

    நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான பல்வேறு முயற்சிகளை இந்த அமைச்சகம் முன்னெடுத்துள்ளது.

    வலுவான இந்தியாவை உருவாக்குவதில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன .

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் பேசும்போது:

    தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மூலம் பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் பட்டியல் இனத்தவா், பழங்குடியின இளைஞா்களுக்கு ரூ. 37 கோடி மானியத்துடன் ரூ. 148 கோடி கடனுதவி அளிக்கப்பட்டு, 1,535 படித்த இளைஞா்கள் புதிய தொழில்முனைவோா்களாக உருவாக்கப்பட்டுள்ளனா்.தி.மு.க அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் இந்த 3 வகையான திட்டங்களின் கீழ் ரூ. 399 கோடி மானியத்துடன் ரூ. 1,596 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு, 11,330 படித்த இளைஞா்கள் புதிய தொழில்முனைவோா்களாக உருவாக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

    பொருளாதார ஆய்வு

    ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பேசும்போது:

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொழில்மு னைவோருக்காகத் தொழில்நுட்பப் பொருளாதார ஆய்வு மூலம் ரூ. 100 கோடி செலவில் திட்ட அறிக்கை வங்கி ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் தொடங்குவதற்குச் சாதகமாக உள்ள தொழில் திட்டங்களைக் கண்டறிந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட உதவும் விதமாக மாவட்ட வாரியாக தொழில்நுட்பப் பொருளாதார ஆய்வு நடத்தப்படும் என்றாா் .

    மாநாட்டில், வெற்றிகரமாகத் தொழில் செய்யும் தொழில் முனைவோா்களைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மத்திய அரசின் குறு, சிறு நிறுவனங்கள் துறை இணைச் செயலா் மொ்சி, ஆதிதிராவிடா் நலத் துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலா் டி.எஸ். ஜவஹா், தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, தொழில் வணிகத் துறை ஆணையா் சிஜி தாமஸ், தாட்கோ மேலாண் இயக்குநா் கந்தசாமி, தாட்கோ தலைவா் மதிவாணன், மாநிலங்களவை உறுப்பினா் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கால்நடை பராமரிப்பு கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • தவணை தவறி செலுத்தும் பட்சத்தில் இந்த கடனுக்கான 7 சதவீதம் வட்டியுடன் அபராத வட்டியும் சோ்த்து செலுத்த வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு விவசாயத்துடன் இணைந்த கால்நடை வளர்ப்பு காரியங்களுக்கு நடைமுறை மூலதன செலவினங்களுக்காக (வளர்ப்பு செலவினங்கள்) ஓராண்டு தவணையில் வட்டியில்லா கடன்கள் வழங்கி வருகின்றது.

    பால்மாடு வளர்ப்பிற்கு தலா ஒரு மாட்டிற்கு ரூ.14 ஆயிரம் வீதமும், ஆடு வளர்ப்பிற்கு 10+1 ஆடுகளுக்கு ரூ.18ஆயிரம் வீதமும், ரூ.1.60 லட்சம் வரை அடமானம் ஏதுமின்றி வட்டியில்லா கடன்கள் வழங்கப்படுகிறது.

    கடன் பெற விரும்பும் விவசாயிகள், விவசாயி மற்றும் மாடு, ஆடு வளர்ப்பதற்கான சான்றுகளுடன் தங்கள் விவகார எல்லைக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இந்த கடன்களை ஓர் ஆண்டுக்குள் திருப்பி செலுத்தினால் அந்த கடனுக்கான வட்டியை தமிழக அரசு வழங்கும். தவணை தவறி செலுத்தும் பட்சத்தில் இந்த கடனுக்கான 7 சதவீதம் வட்டியுடன் அபராத வட்டியும் சோ்த்து செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க.ஆட்சி பொறுப்பேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல கமிட்டி அமைக்கப்பட்டது.
    • முதல்-அமைச்சர் ரூ.100 கோடி நிதியில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் நடந்த தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மண்டல மாநாட்டில், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சமச்சீர், ஏற்றுமதி, பொருளாதாரம் போன்றவற்றிற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் திட்டமாக தீட்டப்பட்டது. இந்த திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக தொழில்முனைவோர்கள் வங்கி கடன் பெறுவதில் உள்ள சிரமங்களை குறைக்க, இந்தியாவிலேயே முதல் முறையாக நமது முதல்-அமைச்சர் ரூ.100 கோடி நிதியில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.

    இந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் பெறும் சொத்து பிணயம் இல்லாத வங்கி கடனுக்கு 90 சதவீதம் வரை கடன் உத்தரவாதத்தை தமிழக அரசு ஏற்கும். இந்தியாவிலேயே 90 சதவீதம் வரை கடன் உத்தரவாதம் வழங்க உள்ள மாநிலம் தமிழகம் தான். சிறு, குறு நிறுவனங்களின் மூலதன சிக்கலை தீர்க்கும் விதமாக வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு கடன் வழங்குவார்கள். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து, தொழிலை மீண்டும் அமைக்கவும், தொடங்கவும் இந்த திட்டம் உதவும்.

    மேலும் ரூ.25 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல் நிதி நெருக்கடியில் சிக்கிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், தொழிலை அதிகரிக்கவும் முதலீட்டு மானியத்தில் 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வருகிறது. விரைவில் இவர்களுக்கு கடன் மற்றும் மானியம் வழங்கப்படும். சிறு, குறு நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக ஏற்படும் காலதாமதத்திற்கு தீர்வு காண சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 252 நிறுவனங்களுக்கு ரூ.50 கோடியே 12 லட்சம் தொகை வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் மூலமாக நீட்ஸ் உள்ளிட்ட சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க ஆண்டுக்கு 10 ஆயிரம் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற இந்த குறுகிய காலகட்டத்தில் ரூ.310 கோடியே 33 லட்சம் மானியத்துடன் ரூ.1253 கோடி வங்கி கடன் உதவி வழங்கப்பட்டு, இதுவரை 10 ஆயிரத்து 216 படித்த இளைஞர்கள் புதிய தொழில்முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ரூ.28 கோடியே 38 லட்சம் மானியத்தில், ரூ.113 கோடியே 52 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு 322 பேர் புதிய தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். இதுபோல் ஈரோடு, கோவை மாவட்டத்தில் ரூ.248 கோடியே 59 லட்சம் மானியத்தில், ரூ.996 கோடியே 34 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு 906 புதிய தொழில்முனைவேர்களை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

    • பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை இனத்தவர்கள் சுயதொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்
    • கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின இனத்தவர் கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தொழில் கடன், தனிநபர் கடன், சுய உதவிகுழு சிறுகடன் மற்றும் கறவை மாடு வாங்க கடனுதவி, உயர் கல்வி கடன் பெற விரும்புவர்கள், வரும் 6-ம் தேதி திருமானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 13-ந் தேதி செந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 20-ந் தேதி உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 27-ந் தேதி தென்னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள கடன் முகாமில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

    ×