search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.113.52 கோடி கடன் வழங்கி திருப்பூரில் 322 தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளோம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
    X

    அமைச்சர் தா.மோ.அன்பரசன். 

    ரூ.113.52 கோடி கடன் வழங்கி திருப்பூரில் 322 தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளோம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

    • தி.மு.க.ஆட்சி பொறுப்பேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல கமிட்டி அமைக்கப்பட்டது.
    • முதல்-அமைச்சர் ரூ.100 கோடி நிதியில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் நடந்த தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மண்டல மாநாட்டில், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சமச்சீர், ஏற்றுமதி, பொருளாதாரம் போன்றவற்றிற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் திட்டமாக தீட்டப்பட்டது. இந்த திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக தொழில்முனைவோர்கள் வங்கி கடன் பெறுவதில் உள்ள சிரமங்களை குறைக்க, இந்தியாவிலேயே முதல் முறையாக நமது முதல்-அமைச்சர் ரூ.100 கோடி நிதியில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.

    இந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் பெறும் சொத்து பிணயம் இல்லாத வங்கி கடனுக்கு 90 சதவீதம் வரை கடன் உத்தரவாதத்தை தமிழக அரசு ஏற்கும். இந்தியாவிலேயே 90 சதவீதம் வரை கடன் உத்தரவாதம் வழங்க உள்ள மாநிலம் தமிழகம் தான். சிறு, குறு நிறுவனங்களின் மூலதன சிக்கலை தீர்க்கும் விதமாக வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு கடன் வழங்குவார்கள். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து, தொழிலை மீண்டும் அமைக்கவும், தொடங்கவும் இந்த திட்டம் உதவும்.

    மேலும் ரூ.25 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல் நிதி நெருக்கடியில் சிக்கிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், தொழிலை அதிகரிக்கவும் முதலீட்டு மானியத்தில் 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வருகிறது. விரைவில் இவர்களுக்கு கடன் மற்றும் மானியம் வழங்கப்படும். சிறு, குறு நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக ஏற்படும் காலதாமதத்திற்கு தீர்வு காண சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 252 நிறுவனங்களுக்கு ரூ.50 கோடியே 12 லட்சம் தொகை வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் மூலமாக நீட்ஸ் உள்ளிட்ட சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க ஆண்டுக்கு 10 ஆயிரம் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற இந்த குறுகிய காலகட்டத்தில் ரூ.310 கோடியே 33 லட்சம் மானியத்துடன் ரூ.1253 கோடி வங்கி கடன் உதவி வழங்கப்பட்டு, இதுவரை 10 ஆயிரத்து 216 படித்த இளைஞர்கள் புதிய தொழில்முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ரூ.28 கோடியே 38 லட்சம் மானியத்தில், ரூ.113 கோடியே 52 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு 322 பேர் புதிய தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். இதுபோல் ஈரோடு, கோவை மாவட்டத்தில் ரூ.248 கோடியே 59 லட்சம் மானியத்தில், ரூ.996 கோடியே 34 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு 906 புதிய தொழில்முனைவேர்களை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×