செய்திகள்

வடகொரிய அதிபருடன் ஒப்பிட்டு மோடியை சர்வாதிகாரியாக சித்தரித்து போஸ்டர்: உ.பி.யில் பரபரப்பு

Published On 2017-10-15 06:31 GMT   |   Update On 2017-10-15 06:31 GMT
பணமதிப்பு நீக்கத்தால் உத்தரபிரதேச மாநில வர்த்தகர்கள், வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னுடன் பிரதமர் நரேந்திரே மோடியை ஒப்பிட்டு சர்வாதிகாரி போல் போஸ்டரை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
லக்னோ:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி உயர் மதிப்பிலான ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து வினியோகிக்கப்பட்டன.

அதோடு கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தினார். பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்திய பொருளாதாரம் மேலும் சரிவை சந்தித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தது. பணமதிப்பு நீக்கத்தால் சிறு தொழில்கள் நலிந்தன. வர்த்தகர்கள் பெறும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் வடகொரியாவின் சர்வாதிகாரியான அதிபர் கிம் ஜாங்-உன்னுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடியின் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அந்த போஸ்டரில் ஒரு புறத்தில் கிம் படமும், மற்றொரு புறத்தில் மோடியின் படமும் இருக்கிறது.

அந்த போஸ்டரில் உலகத்தை அழிக்காமல் ஓயமாட்டேன். வியாபாரத்தை அழிக்காமல் விட மாட்டேன் என்று சொல்வது போல் வாசகம் இடம் பெற்றுள்ளது. பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட கடும் பாதிப்பால் ஆத்திரம் அடைந்த வர்த்தகர்கள் இந்த போஸ்டரை கான்பூர் நகரில் அச்சடித்து ஒட்டியுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 3 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பாய்ந்து உள்ளது.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News