செய்திகள்

மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முன்னாள் ராணுவ மேஜர் ஜாமினில் விடுவிப்பு

Published On 2017-09-26 10:55 GMT   |   Update On 2017-09-26 10:55 GMT
மராட்டிய மாநிலம், மலேகான் நகரில் 7 உயிர்களை பலிவாங்கிய குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ மேஜர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
மும்பை:

மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த வழக்கை முதலில் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரித்தது. ராணுவ லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித் மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றனர். 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாத்வி பிரக்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டு மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர்களை குற்றவாளிகளாகச் சேர்த்தது.

அதன்பிறகு தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு 2011-ல் மாற்றப்பட்டது. பின்னர், பிரசாத் புரோஹித், மேஜர் ரமேஷ் உபாத்யாயா உள்ளிட்ட 10 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி பிரசாத் புரோஹித் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி புரோஹித் சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை காரணமாக ஒன்பது ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். எனவே, ஜாமின் வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய பெஞ்ச், புரோஹித்தை ஜாமினில் விடுவித்தது.

இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா சார்பில் அவரை ஜாமினில் விடுவிக்கக்கோரி சமீபத்தில் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சித் மோரே, சாத்னா ஜாதவ் ஆகியோரை கொண்ட அமர்வின்முன் இன்று விசாரணைக்கு வந்தது. மலேகான் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ள அவரை ஜாமினில் விடுவிக்க கூடாது என தேசிய புலனாயுவு முகமையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தேஷ் பட்டேல் வாதாடினார்.

இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல் குற்றவாளி ஸ்ரீகாந்த் புரோஹித்துக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகையில் ஜாமின் வழங்கியுள்ளது. மேலும், சுதாகர் சதுர்வேதி சுதாகர் தார் திவேதி ஆகியோரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, எனது கட்சிக்காரருக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது நீதியல்ல. ரமேஷ் உபாத்யாயாவையும் ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர் வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீகாந்த் புரோஹித்தைவிட ரமேஷ் உபாத்யாயாவுக்கு இவ்வழக்கில் முக்கிய பங்கு உள்ளதா? என அரசுதரப்பு வக்கீலிடம் கேள்வி எழுப்பினர்.

ஸ்ரீகாந்த் புரோஹித் ஏற்கனவே ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதால், பாரபட்சமற்ற நடவடிக்கையாக ரமேஷ் உபாத்யாயாவுக்கு ஜாமின் அளித்து உத்தரவிடப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.
Tags:    

Similar News