செய்திகள்

போலீசாரின் மனிதாபிமானமற்ற செயல்: இறந்தவர் உடலை கட்டி ரிக்சாவில் ஏற்றிச்சென்ற அவலம்

Published On 2017-09-21 14:51 GMT   |   Update On 2017-09-21 14:51 GMT
ஜார்கண்ட் மாநிலத்தில் மனிதாபிமானமற்ற வகையில் இறந்தவர் உடலை கட்டி ரிக்சாவில் ஏற்றிச் சென்ற போலீசாரின் நடவடிக்கை பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
பீகார், உத்தர பிரதேச மாநிலங்களில் ஏழை பொதுமக்கள் ஆம்புலன்ஸ், மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடப்பதுண்டு. ஏழைத் தொழிலாளி ஒருவர் இறந்துபோன தனது மனைவின் உடலை அடக்கம் செய்வதற்கு ஆம்புலன்ஸ் உதவியை நாடினார். ஆனால் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கவில்லை. இதனால் தனது மனைவியின் உடலை கட்டி தோளில் தூக்கிக்கொண்டு தனது மகளுடன் சென்று அடக்கம் செய்தார். இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியது.

மற்றொரு சம்பவத்தில் தனது மகனை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஸ்ட்ரெச்சர் கிடைக்காமல் தந்தை ஒருவர் அவதிப்பட்டார். இப்படி மனிதாபிமானமற்ற செயல்கள் அடிக்கடி நடப்பதுண்டு.

ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் சுட்டியா காவல் நிலையத்திற்கு உட்பட பகுதியில் ஆக்ஸ்போர்டு பப்ளிக் ஸ்கூல் அருகே உள்ள செப்டிக் டேங்கில் ஒரு உடல் கிடப்பதாக பொதுமக்கள் போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்க அவர்கள் முயற்சிக்கவில்லை. உடலை நன்றாக கட்டி, ஒரு ரிக்சாவை பிடித்து அதில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

இறந்தவர் உடல் என்றாலும் ரிக்சாவில் சரக்குகளை எடுத்துச் செல்வதுபோல் உடலை எடுத்துச் சென்றது, அப்பகுதி பொதுமக்கள் மனிதாபிமானமற்ற போலீசாரின் செயலைக்கண்டு முகம் சுழித்தனர்.

இறந்தவர் பெயர் ஜாவித் என்றும், அவர் பீகாரில் இருந்து ஜார்கண்ட் வந்து கடை வைத்திருந்தார் என்றும் அவரது உடலில் காயம் ஏதுமில்லை, பிரேத பரிசோதனைக்கு பின்னர்தான் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News