செய்திகள்

பொருளாதார வளர்ச்சிக்காக அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகும் மத்திய அரசு

Published On 2017-09-20 16:17 GMT   |   Update On 2017-09-20 16:17 GMT
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறி உள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது (ஜிடிபி) 2016ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக 6 காலாண்டுகளாக சரிவை சந்தித்து உள்ளது. ஏப்ரல்- ஜூன் காலாண்டில், மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு 5.7 சதவீதமாக சரிந்திருப்பதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்து உள்ளது. இந்நிலையில் மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறி உள்ளார்.

கூடுதல் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அருண் ஜெட்லி குறிப்பிட்டு உள்ளார்.

பொருளாதார தற்போதைய நிலை குறித்து அறியவும், வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அமைச்சரவை அதிகாரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில், அருண் ஜெட்லி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களிடம் உள்ள எல்லா விதமான பொருளாதார குறியீடுகளையும் கவனத்தில் எடுத்துள்ளோம். தேவைப்படும் அனைத்து கூடுதல் நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும். இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் நடவடிக்கையை அறிவிக்கும் நிலையில் நான் இல்லை. நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் ஆலோசனை நடத்தப்படும். முடிவு எடுக்கப்பட்டதும் தெரியப்படுத்துவோம்.

பொருளாதார வளர்ச்சிக்காக சரியான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம். சீர்திருத்த கொள்கையில் நாங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News