செய்திகள்

கற்பழிப்பு வழக்கை வாபஸ் பெற மறுத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் படுகொலை

Published On 2017-09-18 12:33 GMT   |   Update On 2017-09-18 12:33 GMT
மேற்கு வங்காளம் மாநிலத்தில் கற்பழிப்பு வழக்கை வாபஸ் பெறாததால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை கொன்ற கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம்  மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் துலால் மாண்டல். இவர் கடந்த 2011-ம் ஆண்டு கிராந்தாபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களில் அந்த பெண்ணை சித்தார்த்தா மாண்டல் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையில் புகாரை திரும்ப பெறக் கூறி சித்தார்த், துலாலை மிரட்டிவந்துள்ளார். இல்லாவிட்டால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். ஆனால் துலால் புகாரை வாபஸ் பெற முடியாது என கூறினார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை துலால் தனது உறவினருடன் வெளியே காரில் சென்றுள்ளார். அப்போது சித்தார்த் தனது நண்பருடன் இணைந்து சென்று துலால் சென்ற காரை வழிமறித்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். இதில் துலால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துலாலின் உறவினர் தப்பித்து சென்றுவிட்டார்.

இதைத்தொடர்ந்து, நேற்று துலாலின் உடலை புட்னி ரிங் பஞ்ச் பகுதியில் உள்ள நீர்நிலையில் இருந்து போலீசார் மீட்டனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த சித்தார்த்தின் சகோதரர் மற்றும் அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சித்தார்த் தலைமறைவாகி உள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News