செய்திகள்

எடப்பாடி அரசு மக்கள் மன்றத்தில் தோற்கடிக்கப்படும் - தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின்

Published On 2017-09-18 08:59 GMT   |   Update On 2017-09-18 08:59 GMT
குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முயற்சிக்கும் எடப்பாடி அரசு மக்கள் மன்றத்தில் தோற்கடிக்கப்படும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பின் டி.டி.வி.தினகரன் 19 எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். அவர் 19 எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தார்.

முதல்வரை மாற்றுவது என்பது உள்கட்சி விவகாரம், எனவே நான் தலையிட முடியாது என்று கவர்னர் அவர்களிடம் தெரிவித்து விட்டார். ஆனாலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள்.

இதற்கிடையே, 19 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கு அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இதை ஏற்று சபாநாயகர் தனபால் 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அதில், தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்குமாறு கூறியிருந்தார்.

ஆனால், எம்.எல்.ஏ.க்கள் நேரில் விளக்கம் அளிக்க வரவில்லை. அவர்கள் சார்பில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகரை சந்தித்து பேசினார். இதற்கிடையே தினகரன் அணியில் இருந்த ஜக்கையன் எம்.எல்.ஏ. மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பினார்.

இந்நிலையில் சபாநாயகர் தனபால் திடீரென்று 18 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவி விட்டதாக கூறி தகுதி நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகரும், முதலமைச்சரும் கூட்டு சேர்ந்து ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போதுள்ள அசாதாரண அரசியல் நெருக்கடிக்கு மத்திய அரசும், ஆளுநர் வித்யாசாகர் ராவும் முழு பொறுப்பேற்க வேண்டும்.

குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முயற்சிக்கும் எடப்பாடி அரசு மக்கள் மன்றத்தில் தோற்கடிக்கப்படும்.

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் எம்.எல்.ஏ.க்களை நீக்கிவிட்டால் தப்பித்து விடலாம் என இதுபோன்று முடிவெடுத்துள்ளனர். குறுக்கு வழியில் ஆட்சியை காப்பாற்ற முதலமைச்சர் முயற்சி செய்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அனைத்து எம்.எல்.ஏக்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News