செய்திகள்

பதவியேற்புக்கு முன்பு பிரதமர் அலுவலகத்தில் இருந்து கண்ணந்தானத்தின் செல்போனுக்கு வந்த 7 மிஸ்டு கால்கள்

Published On 2017-09-05 12:57 GMT   |   Update On 2017-09-05 12:57 GMT
மத்திய மந்திரியாக பதவியேற்கும் முன்பு டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அல்போன்ஸ் கண்ணந்தானத்தின் செல்போனுக்கு ஏழு மிஸ்டு கால்கள் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:

மத்திய மந்திரி சபையை பிரதமர் மோடி மாற்றி அமைக்க உள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்துவது போல ஏற்கனவே பதவியில் இருந்த மந்திரிகள் சிலர் ராஜினாமா செய்தனர். இதையடுத்து புதிய மந்திரிகள் யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டது.

வடமாநில எம்.பி.க்களுக்கே மந்திரியாகும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத கேரள மாநிலத்தில் இருந்து அல்போன்ஸ் கண்ணந்தானம் என்பவர் சுற்றுலாத்துறை ராஜாங்க மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

இதற்கான தகவலை அல்போன்ஸ் கண்ணந்தானத்திற்கு தெரிவிக்கும் முன்பு டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள் திணறிப் போனது இப்போது தெரிய வந்துள்ளது.

அல்போன்ஸ் கண்ணந்தானம் கடந்த வாரம் டெல்லியில்தான் தங்கி இருந்தார். கடந்த சனிக்கிழமை கோழிக்கோட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறி இருந்தார். இதற்காக சனிக்கிழமை காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்றார். அங்கிருந்து கோழிக்கோடு செல்லும் விமானத்தை பிடிக்க வேகமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அல்போன்ஸ் கண்ணந்தானம் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்து பார்த்தபோது ஏற்கனவே அதேஎண்ணில் இருந்து 7 மிஸ்டுகால்கள் பதிவாகி இருந்தன. இதனால் அல்போன்ஸ் கண்ணந்தானம் செல்போனை எடுத்து பேசினார்.

மறுமுனையில் இருந்து பேசியவர் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இருந்து முதன்மை அதிகாரி பேசுவதாக கூறினார். கேரளாவில் பாரதிய ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினை பற்றி பிரதமர் பேச விரும்புகிறார். எனவே நீங்கள் பெங்களூருவில் இருந்து உடனடியாக டெல்லிக்கு திரும்பி வாருங்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த அல்போன்ஸ் கண்ணந்தானம், இன்று கோழிக்கோட்டில் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்கிறேன். மறுநாள் டெல்லி வந்து பிரதமரை சந்திக்கிறேன் என்று பதில் கூறினார்.

இதை ஏற்க மறுத்த பிரதமர் அலுவலக அதிகாரி, மிகவும் முக்கியமான வி‌ஷயம் என்பதால் நீங்கள் கண்டிப்பாக டெல்லி வந்தே தீரவேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டனர்.

இதனால் அல்போன்ஸ் கண்ணந்தானம் கோழிக்கோடு பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி சென்றார். சனிக்கிழமை இரவு 7 மணிக்கு அல்போன்ஸ் கண்ணந்தானம் போனுக்கு இன்னொரு அழைப்பு வந்தது. அதை எடுத்து தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அல்போன்ஸ் கண்ணந்தானத்திற்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதை விட ‘உங்களை மத்திய மந்திரிசபையில் சேர்க்க முடிவு செய்துள்ளேன். புதிய மந்திரிகள் ஞாயிற்றுக் கிழமை என்னுடன் காலை உணவு உண்ண வர வேண்டும். நீங்களும் அதில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்’ என பிரதமர் கூறியதை கேட்டு அல்போன்ஸ் கண்ணந்தானம் வியப்பின் உச்சத்திற்கு சென்றார்.

அன்று பிற்பகல் நடந்த பதவியேற்பு விழாவில் அல்போன்ஸ் கண்ணந்தானத்துடன் அவரது மனைவி மட்டுமே கலந்து கொண்டார்.
Tags:    

Similar News