செய்திகள்

மத்திய மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எனக்கு தகவல் இல்லை: உத்தவ் தாக்கரே

Published On 2017-09-03 04:03 GMT   |   Update On 2017-09-03 04:03 GMT
மத்திய மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எனக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை இன்று (ஞாயிற்றுக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி சில மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். புதிய மந்திரிகள் பதவி ஏற்கிறார்கள்.

மராட்டியத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பியூஷ் கோயல் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா கூட்டணி கட்சியை சேர்ந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் நேற்று மும்பையில் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

இன்றைக்கு ஒவ்வொருவரும் மத்திய மந்திரிசபை விரிவாக்கத்தில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மும்பை மக்களுக்கு தரமான சுகாதார வசதியை ஏற்படுத்தி தருவதில் முனைப்புடன் செயலாற்றி வருகிறோம்.

எங்கள் கட்சியின் கொள்கையே 80 சதவீதம் சமூக சேவை, 20 சதவீதம் அரசியல் என்பது தான். இதனை தான் கடந்த 50 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம்.

மத்திய மந்திரிசபை விரிவாக்கம் பற்றி ஊடகம் வாயிலாக தான் நான் அறிந்து கொண்டேன். பா.ஜனதா தலைமையிடம் இருந்து எனக்கு எந்தவொரு தகவலும் வரவில்லை. எங்களுக்கு அதிகார பசி கிடையாது.

இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.
Tags:    

Similar News