search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cabinet expansion"

    • வருகிற 31-ந் தேதி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
    • கட்சியை வலுப்படுத்த சில மத்திய மந்திரிகள் கட்சிப்பணிக்கு அனுப்பப்படலாம்.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 2014-2019 ஆண்டு காலகட்டத்தில் 3 தடவை மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், 2-வது தடவையாக பதவி ஏற்ற பிறகு கடந்த 2021-ம் ஆண்டு ஒருதடவை மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டது.

    பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் இம்மாதம் 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடக்கிறது. 9 மாநில சட்டசபை தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது.

    இந்தநிலையில், மத்திய மந்திரிசபை இம்மாதம் மாற்றி அமைக்கப்படலாம் என்ற பேச்சு வலுவடைந்து வருகிறது. வருகிற 31-ந் தேதி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

    அதற்கு முன்பு எந்த நேரத்திலும் மந்திரிசபை மாற்றி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், தகவல் அறிந்த வட்டாரங்கள் இத்தகவலை தெரிவித்தன.

    கடந்த மந்திரிசபை மாற்றத்துக்கு பிறகு முக்தார் அப்பாஸ் நக்வி பதவிக்காலம் முடிந்தது. ஐக்கிய ஜனதாதளம் விலகியது. இதனால், மந்திரிசபையில் காலியிடங்கள் ஏற்பட்டன.

    அவற்றை நிரப்பும்வகையில், மந்திரிசபை மாற்றம் இருக்கும். அப்போது, மத்திய மந்திரிகளின் செயல்பாடுகள், சட்டசபை தேர்தல் நடக்கும் மாநிலங்களின் அரசியல் கணக்குகள் ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

    மராட்டிய மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, மந்திரிசபையில் சேர்த்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது. மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வானுக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம்.

    குஜராத் சட்டசபை தேர்தலில் பெற்ற அமோக வெற்றி, இமாசலபிரதேச சட்டசபை தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தல் ஆகியவற்றில் பெற்ற பாடங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு மந்திரிசபை மாற்றம் இருக்கும்.

    பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், தெலுங்கானா ஆகிய பெரிய மாநிலங்களின் அரசியல் கணக்குகளும் கவனத்தில் கொள்ளப்படும். சட்டசபை தேர்தல் நடக்கும் கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்களுக்கு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

    அதே சமயத்தில், கட்சியை வலுப்படுத்த சில மத்திய மந்திரிகள் கட்சிப்பணிக்கு அனுப்பப்படலாம் என்றும் தெரிகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே இருப்பதால், இதுதான் கடைசி மந்திரிசபை மாற்றமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • மந்திரி சபை விரிவாக்கத்தில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • நிதித்துறையை கைப்பற்ற பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

    மும்பை :

    ஜூன் 30-ந் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். சுமார் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது.

    ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த தலா 9 பேர் என மொத்தம் 18 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இதனால் ஷிண்டே, பட்னாவிசை சேர்த்து மந்திரி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

    நீண்ட இழுபறிக்கு பிறகு நடந்த மந்திரி சபை விரிவாக்கத்தில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்த மந்திரி சபை விரிவாக்கத்தின் போது பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்துள்ளார்.

    மந்திரி சபை விரிவாக்கத்தை தொடர்ந்து உடனடியாக இலாகா ஒதுக்கீடு செய்வது வழக்கம். ஆனால் மந்திரி சபை விரிவாக்கத்தை போல மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வதிலும் இழுபறி நீடித்து வருகிறது. முக்கிய இலாகாக்களை கைப்பற்ற இரு தரப்பினர் இடையே போட்டி வலுத்து உள்ளதால், இந்த இழுபறி நீடிப்பதாக தெரியவந்தது.

    இருப்பினும் இலாகா பகிர்வு தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முக்கிய இலாகாவான உள்துறையை தன்வசம் வைத்து கொள்வார் என பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினரை கண்காணிக்க இந்த இலாகா அவருக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

    தேவேந்திர பட்னாவிஸ் 2014 முதல் 2019 வரை முதல்-மந்திரியாக இருந்தபோது, உள்துறையை தன் வசமே வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல மற்றொரு முக்கிய இலாகாவான நிதித்துறையை கைப்பற்ற பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே எந்த இலாகாவை நிர்வகிப்பார் என தெளிவாக தெரியவில்லை. எனினும் அவர் நகர்ப்புற வளர்ச்சி, மாநில அரசு போக்குவரத்து கழகம் ஆகிய இலாகாக்களை வகிப்பார் என கூறப்படுகிறது. கடந்த மகா விகாஷ் அகாடி ஆடசியில் அவர் பொதுப்பணித்துறை, நகர வளர்ச்சி, மாநில போக்குவரத்து கழகம் ஆகிய இலாகாக்களை வகித்தார்.

    பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மூத்த தலைவர் சுதீர் முங்கண்டிவார் ஆகியோருக்கு முக்கிய இலாகாக்கள் வழங்கப்படும் என தெரிகிறது. கடந்த பா.ஜனதா தலைமையிலான ஆட்சியில் சந்திரகாந்த் பாட்டீல் வருவாய் மற்றும் கூட்டுறவு இலாகாக்களையும், சுதீர் முங்கண்டிவார் நிதி மற்றும் வனத்துறையையும் வகித்தனர்.

    பா.ஜனதாவை சேர்ந்த மற்றொரு மந்திரியான விஜய்குமார் காவித்துக்கு பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது. மேலும் அந்த கட்சியை சேர்ந்த தலித் தலைவரான சுரேஷ் காடேக்கு சமூக நீதித்துறை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    • அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
    • வருகிற 12-ந்தேதி தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

    மும்பை

    மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. இதையடுத்து சிவசேனா அதிருப்தி அணி- பா.ஜனதா கட்சியின் கூட்டணி அரசு பதவி ஏற்று சுமார் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 18 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்.

    இதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் 'சாம்னா' பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-

    ஒரு வழியாக மந்திரி சபை விரிவாக்கம் நடந்து விட்டது. எங்களது அதிருப்தியாளர்கள் கங்கையில் நீராடி விட்டனர். ஆனால் அவர்கள் செய்த துரோகத்தின் பாவத்தை கழுவ முடியுமா?.

    மந்திரிகளுக்கு பதவி ஏற்பு விழாவில் ஒரு தெய்வீக செயலை செய்து வைத்தது போல கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் முகம் பளிச்சிட்டது. மந்திரி சபை விரிவாக்கத்துக்கு முன்னதாக ஏக்நாத் ஷிண்டே 7 தடவை தலைநகர் சென்று டெல்லி முன் தலைகுனிந்துள்ளார்.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவர்களது தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. வருகிற 12-ந் தேதி தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. அதற்கு முன் மந்திரி சபை விரிவாக்கத்தின் அவசரம் ஏன்?.

    இதன் பொருள், நீதித்துறை மீது எந்த பயமும் இல்லை என்பது தான். தங்களது விருப்பத்தை நிறைவேற்ற எதையும் செய்யலாம் என்பதை இது காட்டுகிறது. இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டம் மீது நடத்தப்பட்ட ஜனநாயக படுகொலை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர்.
    • இந்த முடிவு அவர்கள் பெண்களை மதிப்பது இல்லை என்பதை காட்டுகிறது.

    மும்பை :

    மராட்டியத்தில் நேற்று மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. 18 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஒரு பெண்ணுக்கு கூட மந்திரி சபையில் இடம் கொடுக்கப்படவில்லை. இதை தேசியவாத காங்கிரசை சேர்ந்த சுப்ரியா சுலே எம்.பி. விமர்சித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "மந்திரி சபையில் ஒரு பெண்ணுக்கு கூட இடம் வழங்கப்படாதது துரதிருஷ்டமானது. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர். ஒரு பெண்ணுக்கு கூட மந்திரி சபையில் இடம் கிடைக்காது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. இந்த முடிவு அவர்கள் பெண்களை மதிப்பது இல்லை என்பதை காட்டுகிறது" என்றார்.

    இந்த விவகாரத்தில் சுப்ரியா சுலே, அவரை சில மாதங்களுக்கு சமையல் அறைக்கு சென்று சமைக்க வேண்டும் என கூறிய பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலையும் மறைமுக விமர்சித்தார்.

    • ஷிண்டேவும், பட்னாவிசும் மட்டுமே அரசை நடத்தி வருகின்றனர்.
    • பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    மும்பை

    மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்று கொண்டனர். பொறுப்பேற்று ஒரு மாதம் முடிந்தும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஷிண்டேவும், பட்னாவிசும் மட்டுமே அரசை நடத்தி வருகின்றனர். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.

    குறிப்பாக மாநிலம் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்தநிலையில் மகாராஷ்டிராவில் விரைவில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் புனேயில் நிருபர்களிடம் கூறுகையில், "விரைவில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும். மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படாத போதும், அரசு முழு திறனுடன் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் சார்ந்து பல்வேறு முடிவுகளை எடுத்து உள்ளோம். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை கட்ட அனுமதி வழங்கி உள்ளோம். மழை தண்ணீரை வறட்சி பாதித்த மரத்வாடா மண்டல பகுதிக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம்." என்றார்.

    இதற்கிடையே இன்னும் 4 நாட்களில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏக்நாத் ஷிண்டே அணியின் செய்தி தொடர்பாளர் தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.

    இதுபற்றி அவர் தெரிவிக்கையில், "மழைக்கால சட்டசபை கூட்டத் தொடரை எதிர்கொள்ளும் வகையில் மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய வேண்டியது உள்ளது. இன்னும் 4 நாளில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும். இதை கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள் என்னிடம் தெரிவித்தனர்" என்றார். மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து திட்டமிட்டப்படி சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. மந்திரி சபை விரிவாக்கத்தை தொடர்ந்து மழைக்கால கூட்டத் தொடர் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மகாராஷ்டிரா மழை வெள்ளத்தை சந்தித்து வருகிறது.
    • புதிய அரசு அமைந்து ஒரு மாதமாகி விட்டது.

    மும்பை :

    மக்கள் வெள்ளத்தில் தவிக்கும் நிலையில் மந்திரி சபை விரிவாக்கத்துக்கான அறிகுறி எதுவும் இல்லை என்று சரத்பவார் குற்றம் சாட்டினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாசிக்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    மகாராஷ்டிரா மழை வெள்ளத்தை சந்தித்து வருகிறது. மக்கள் பரிதவிக்கிறார்கள். குறிப்பாக விவசாயிகள் பெருந்துயரத்தை சந்தித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழலில் மந்திரிகள் நேரில் சென்று மக்கள் துயர் துடைக்க வேண்டும்.

    ஆனால் மகாராஷ்டிராவில் மந்திரி சபை விரிவாக்கத்துக்கான அறிகுறி எதுவும் இல்லை. புதிய அரசு அமைந்து ஒரு மாதமாகி விட்டது. முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி ஆகிய இருவர் மட்டுமே அரசை நடத்தி செல்லலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார்கள். இவர்களிடம் இருந்து முதல்-மந்திரி ஷிண்டே பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய அரசு கவிழுமா? என்று நிருபர் ஒருவர் சரத்பவாரிடம் கேட்டார்.

    அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், "இதை கணிக்க நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. தேர்தல் எப்போது வந்தாலும், அதை சந்திக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்-மந்திரி அலுவலகத்திலும் இன்னும் நிர்வாக அமைப்பு இல்லை.
    • முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரி இருவர் மட்டுமே ஆட்சியை நடத்துகின்றனர்.

    மும்பை :

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதால் சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து சிவசேனா அதிருப்தி அணியினர் பா.ஜனதாவுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினர். முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால் மகாராஷ்டிரா மந்திரி சபை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் அதுல் லோண்டே கூறியதாவது:-

    மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி அரசு பதவியேற்று 15 நாட்கள் ஆகியும், மந்திரி சபை விரிவாக்கம் நடைபெறவில்லை. முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரி இருவர் மட்டுமே ஆட்சியை நடத்துகின்றனர். கனமழையால் மாநிலத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    லட்சக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகார மோதல் காரணமாக ஏக்நாத் ஷிண்டே- தேவேந்திர பட்னாவிஸ் அரசு அமைக்கப்பட்டு இருந்தபோதிலும், அரசும் இல்லாமல், நிர்வாகமும் இல்லாமல் மகாராஷ்டிரா அனாதையாக நடத்தப்படுகிறது. நீண்ட அரசியல் நாடகத்திற்கு பிறகு பா.ஜனதா தலைமையிலான அரசு அமைந்தாலும், இதுவரை மந்திரிசபை அமைக்கப்படவில்லை.

    முதல்-மந்திரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் துறைகள் ஒதுக்கப்படவில்லை. முதல்-மந்திரி அலுவலகத்திலும் இன்னும் நிர்வாக அமைப்பு இல்லை. கடந்த 15 நாட்களில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் செய்யும் ஒரே வேலை மகா விகாஸ் அகாடி அரசு எடுத்த முடிவுகளை மாற்றியமைப்பதை தான்.

    ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவியேற்றவுடன் விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணாமல் ஆரே காலனி பணிமனை அமைக்கும் முடிவை எடுக்கிறது. இந்த முடிவு மும்பை மக்களின் வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். கனமழையால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆறுகள் நிரம்பி வழிகின்றன. மக்களுக்கு அவசர உதவி தேவைப்படுகிறது.

    ஆனால் முதல்-மந்திரி 'லைட்', 'கேமரா', ஆக்சன் என்ற பிம்பத்திற்குள் சிக்கிகொண்டதாக தெரிகிறது. அவர் செய்யும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும், அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு விமர்சனமும் பதிவு செய்யப்படுகின்றன. இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பிரச்சினையை ஆட்சிக்கு வந்தவுடன் தீர்த்து வைப்போம் என பேசியவர்களால் கோர்ட்டில் வழக்கை கூட சரியாக தாக்கல் செய்ய முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியினரால் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
    • மாநில அரசில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது.

    மும்பை :

    சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியினரால் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த 30-ந்தேதி முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும் பதவி ஏற்றனர். இந்த நிலையில் புதிய அரசின் மந்திரி சபை எப்போது விரிவாக்கம் செய்யப்படும் என்ற கேள்வி எழுந்தது.

    இதுகுறித்த நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், "மந்திரி சபை விரிவாக்கம் விரைவில் செய்யப்படும். மந்திரிகள் இலாகா பங்கீடு குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். இதேபோல முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும் மந்திரி இலாகா ஒதுக்கீடு குறித்து விவாதிக்க சிறிது நேரம் தேவைப்படுவதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    முதலில் நாங்கள் சரியாக சுவாசிக்க முயற்சிக்கிறோம். மாநில அரசில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றங்கள் எங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருந்தது. நானும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் அமர்ந்து இலாகாக்கள் ஒதுக்கீடு குறித்து விவாதிப்போம். பா.ஜனதாவின் தேசிய தலைவர்களிடம் இருந்தும் இதுகுறித்து ஆலோசனைகளை பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் அதிருப்தி அணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீசு அனுப்பியது தொடர்பான வழக்கு, சிவசேனா கட்சியின் கொறடாவை மாற்றிய சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ஆகியவை வருகிற 11-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என அரசு வட்டாரங்களின் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

    • மந்திரிசபையை விரிவாக்கம் செய்யவோ, மாற்றியமைக்கவோ பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கவில்லை.
    • ஜே.பி.நட்டா மற்றும் அமித்ஷாவை பசவராஜ் பொம்மை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு கூட இல்லாததால் மந்திரிசபையில் காலியாக உள்ள 6 இடங்களை நிரப்ப வேண்டும் என்று மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    அதே நேரத்தில் சட்டசபை தேர்தலையொட்டி மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதற்கு பதிலாக, மாற்றியமைக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும், மூத்த மந்திரிகளை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து, மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் மாற்றியமைப்பு குறித்து முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை பலமுறை டெல்லி சென்று பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார்.

    ஆனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யவோ, மாற்றியமைக்கவோ பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கவில்லை. மாறாக மாநிலங்களவை தேர்தல், கர்நாடக மேல்-சபை தேர்தலை காரணம் காட்டி தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பெங்களூருவுக்கு வந்திருந்தார். அப்போது கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து கர்நாடக தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி இருந்தார்.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 20-ந்தேதி பெங்களூருவுக்கு வந்தார். பின்னர் நேற்று முன்தினம் மைசூருவில் நடந்த சர்வதேச யோகா தினவிழாவிலும் பிரதமர் கலந்து கொண்டார். இதையடுத்து, கர்நாடக பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்திருந்தனர். அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகம் வந்து சென்றிருப்பதால், பா.ஜனதாவில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்ற மறுநாளே(அதாவது நேற்று) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை டெல்லிக்கு உடனடியாக வரும்படி பா.ஜனதா மேலிட தலைவர்கள் திடீர் அழைப்பு விடுத்துள்ளனர். பா.ஜனதா தலைவர்களின் அழைப்பை ஏற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று(வியாழக்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.

    அங்கு பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் மாற்றியமைப்பது குறித்து ஜே.பி.நட்டா மற்றும் அமித்ஷாவுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே பலமுறை மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பலமுறை டெல்லிக்கு சென்று வந்திருந்தாலும், அதற்கான அனுமதியை பா.ஜனதா மேலிடம் வழங்கவில்லை. தற்போது மேலிட தலைவர்களே அழைப்பு விடுத்திருப்பதாலும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாலும், இந்த முறை மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் மந்திரிசபையை மாற்றியமைக்கப்பட்டால் மூத்த மந்திரிகள், அடிக்கடி சர்ச்சை மற்றும் பிற முறைகேடுகளில் சிக்கியவர்கள் நீக்கப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பா.ஜனதா மேலிட தலைவர்களுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நடத்தும் ஆலோசனையை மந்திரி பதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    ×